நடிகர் கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துக்காக, அவரின் நடிப்பில் வெளியாகவுள்ள ’தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிட விடமாட்டோம் என கன்னட இனவாத அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
அதையடுத்து, கர்நாடக அமைச்சர், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் கமலின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் சிவக்குமார் மட்டும் கமல் நமக்கு எதிரி அல்ல என்றும் இதை அரசியல் பிரச்னையாக்க வேண்டாம் என்றும் கூறினார்.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கன்னட திரைப்பட வர்த்தக சபை தொடுத்த வழக்கில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி நாகபிரசன்னா வலியுறுத்தினார்.
ஆனால், படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.
அதையடுத்து வரும் 10ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, கமல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது; கன்னடத்தை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதமும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.