ஆளுநர் ஆர்.என். ரவி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது இ.யூ.முஸ்லிம் லீக் தேசியtஹ் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
“ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தில் முதலமைச்சர் தொடர்ந்து பின்பற்றி வந்த பொறுமை மிகுந்த பொன்னான சட்ட வழிமுறை இன்றைக்கு இந்தியா முழுவதும் பாராட்டுபடியானதொரு அணுகுமுறை என்பதை நிரூபித்திருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதி 200 கூறுவது இதுதான். மாநில சட்டப்பேரவை எடுக்கும் முடிவுகளை - மசோதாகளை - முன் வடிவுகளை, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ, அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவோ, அல்லது திருப்பி அனுப்பவோ செய்வதற்குரிய காலக்கெடு `கூடிய விரைவு’ என்று விதித்திருக்கிறது. இந்த `கூடிய விரைவு’ - `அஸ்ஸூன் அஸ் பாஸிப்பில்’ என்பதற்கான அருத்தம் இதுவரை தெரியாமல் இருந்தது. அதற்குரிய விடிவு இன்றைக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் தாம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வாழ்க! உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வென்றுள்ள தமிழக முதலமைச்சர் என்றும் வாழ்க! தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் வெற்றியை தேடித்தந்தது மூலம் இந்தியாவுக்கே நேர்வழி காட்டிய இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு அரும்பாடுபட்ட வழக்கறிஞர்கள் வாழ்க!
தமிழ்நாடு என்றும் போராடும்! தமிழ்நாடு என்றும் வெல்லும்! இதை நாளைய வரலாறு அடுக்கடுக்காகச் சொல்லும்! தங்கத் தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய கிடப்பில் கிடந்த பத்து மசோதாகளும் இன்று முதல் சட்டமாகின்றன!” என்று காதர் மொகிதீன் கூறியுள்ளார்.