காளியம்மாள் நா.த.க.விலிருந்து விலக சுதந்திரம்- சீமான்

சீமான்
சீமான்
Published on

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்துவருகிறார். இதனால் அவர் கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்படும் நிலையில், திருச்செந்தூர் மணப்பாட்டில் மீனவர் சமூக நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க., காங்கிரசு நிருவாகிகளுடன் அவர் மேடையேறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் அவரின் பெயருடன் கட்சியின் பெயர் இல்லாமல், சமூகச் செயற்பாட்டாளர் என மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இன்று காலை பரபரப்புக்கு உள்ளான இந்த விவகாரம் குறித்து, மதுரையில் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். 

வழக்கமாக உற்சாகமாக ஊடகத்தினரை எதிர்கொள்ளும் அவரின் முகம் சட்டென இறுகிப்போனது. 

கேள்வியைக் கேட்டதும், எப்டி என எதிர்க்கேள்வியுடன் இறுக்கம் காட்டினார். 

இன்னொரு செய்தியாளர் விரிவாக நிகழ்ச்சி அழைப்பிதழைப் பற்றிக் குறிப்பிட்டு காளியம்மாள் கட்சியிலிருந்து விலகும் பேச்சு குறித்து கேட்டார். அப்போது இயல்புக்கு வருவித்துக்கொண்ட சீமான், ” அது தெரியல. அதாவது கட்சிக்குள்ள இருந்து இயங்குவதற்கும் விருப்பம் இல்லைனா வெளியேறுவதற்கும் முழுச் சுதந்திரம் இருக்கு. இது ஒரு ஜனநாயக அமைப்பு. தங்கச்சி மொதல்ல சமூக செயல்பாட்டாளராதான் இருந்தாங்க. அவங்கள அழைச்சிட்டு வந்தது நான்தான். இன்னைக்கு எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு..” என்றவர், 

பின்பக்கம் திரும்பி, ” இப்போது பக்கத்தில் நிக்கிறவர்கூட நாளைக்கு வேறு ஒரு கட்சியில சேர்ந்து இயங்கணும்னு நினைச்சா போகலாம். வரும்போது வாங்க வாங்க வணக்கம், நன்றினு சொல்லுவோம். போறதுன்னா போங்க. ரொம்வ ரொம்ப நன்றினு சொல்வோம். இதுதான் எங்களுடைய கொள்கை.” என்று கூறினார். 

”பருவகாலங்களில் இலையுதிர்காலம் வரும். அதைப்போல எங்கள் கட்சியில் இப்ப களைகள் உதிர் காலம். இப்படி திடீர்திடீர்னு வருவாங்க, போவாங்க. என்ன இப்போ நீங்க..லாம் அவங்ககிட்ட பேட்டிய எடுத்துப்போட்றதால ஒரு கடிதத்தை எழுதிவச்சிட்டுப் போறாங்க.. நான் விலகுறேன்விலகுறேன்விலகுறேன்னு. அதை நீங்க எடுத்துப்போடுங்க. கேக்குறதுக்கு பாக்கிறதுக்கு ரசிக்கிறதுக்கு நல்லாதான் இருக்கு.” என்று கிண்டலாகவும் குறிப்பிட்டார். 

மீண்டும் காளியம்மாள் பக்கம் வந்தவர், “ தங்கச்சிக்கு முழு சுதந்திரம் இருக்கு. கட்சியிலயே இருக்கிறதா இல்ல வேறு எடத்துல போய் சேந்து இயங்குறதாங்கிறத முடிவெடுக்கிற உரிமை அவங்களுக்கு இருக்கு. அதுல நம்ம கருத்து எதுவும் சொல்லமுடியாது.” என்று சீமான் தெளிவாகக் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com