காவி மாடல், திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின் இன்று சொன்ன விளக்கம்!

தேசிய கல்விக் கொள்கை எனும் மத யானை
தேசிய கல்விக் கொள்கை எனும் மத யானை
Published on

பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பில் தொடங்கப்பட்டுள்ள அன்பில் பதிப்பகம் மூலம், ‘தேசிய கல்விக் கொள்கை எனும் மத யானை’ எனும் புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, அண்ணா நூலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார். 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் உரையாற்றினர். 

நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது:

” புத்தகத்தின் தலைப்பே மொத்த கருத்தையும் சொல்லிவிடுகிறது! இப்படியொரு கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கியபோதே “புதிய கல்விக் கொள்கை என்ற மதயானை தமிழகத்துக்குள் புகுந்து, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்கு கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது - வருமுன் காப்பதே அறிவுடைமை" என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கே அறிக்கையாக வெளியிட்டார்!

கலைஞரின் வரிகளையே புத்தகத்தின் தலைப்பாக ஆக்கியிருக்கிறார் நம்முடைய மகேஸ் அவர்கள். இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலைக்கு மிக அவசியமான புத்தகம் இது! ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரைக்கும், எல்லாவற்றையும் காவிமயமாக்க வேண்டும்! முதலில் கல்வியை காவிமயமாக்க வேண்டும்! அதற்காக கொண்டு வந்ததுதான் இந்த தேசியக் கல்விக் கொள்கை! அதனால்தான், நம்முடைய அன்பில் மகேஸ் அவர்கள், இந்தப் புத்தகத்தின் மூலமாக “மதவாதம் உருவாக்கும் அழிவுப் பாதையில் நாம் செல்லப் போகிறோமா? நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கும் சமூகநீதிப் பாதையை நோக்கிச் செல்லப் போகிறோமா?” என்ற மிக முக்கியமான கேள்வியை இந்த நாட்டை நோக்கி அவர் எழுப்பியிருக்கிறார். இதை ஒரு அமைச்சராக மட்டும் அவர் எழுதவில்லை. “சமூகநீதியை அடித்தளமாக கொண்டு உருவான தமிழ்நாட்டின் கல்விக் கூடத்தில் படித்து உருவான ஒரு இளைஞனாக இந்த நூலை எழுதி இருக்கிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டின் இளைஞனாக இந்திய நாட்டு குடிமகனாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக, தன்னுடைய கடமையை சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி மகேஸ் அவர்கள்!

            இந்தப் புத்தகத்தில் நாம் ஏன் சமூகநீதிப் பார்வையோடு தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று விரிவாக எழுதியிருக்கிறார். பா.ஜ.க-வின் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், அதன் எதிர்கால எண்ணங்கள் இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறோம்! எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய திராவிட மாடல்! இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால், அது பா.ஜ.க-வின் காவி மாடல்! “எல்லார்க்கும் எல்லாம்” என்று சொன்னால், அது நம்முடைய திராவிட மாடல் கருத்தியல்! “எல்லாம் ஒருவர்க்கே” என்று சொன்னால், அது ஆரிய கருத்தியல்! இதுதான் ஈராயிரம் ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கின்ற போர்!

இன்றைக்கு நம்முடைய உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமாக இருக்குறதே கல்விதான்! நீதிக்கட்சி காலம் தொடங்கி, நம்முடைய போரை கல்விக் கூடங்கள் எனும் களத்தில்தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்!

அறிவுதான் நம்முடைய ஆயுதம்! இன்றைக்கு, கல்விக்குத் தடை போடும் ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிராக நம்முடைய திராவிட மாடல் அரசு போர்வாளை சுழற்றிக் கொண்டிருக்கிறது! இந்தப் போர் ஏன் முக்கியமானது என்றால், தேசியக் கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இடஒதுக்கீடு இருக்கின்ற வரைக்கும்தான், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும்! பன்முகப் பண்பாட்டை N.E.P. தகர்த்துவிடும்.

75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை கட்டமைப்பதுதான் அவர்களுடைய ஒரே நோக்கம்! தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று சில நாட்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய திரு. அமித்ஷாவே சொல்லி இருக்கிறார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ, அதை உள்துறை அமைச்சரே உறுதி செய்திருக்கிறார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தையும் அழிக்கும் முயற்சி இது! இதை தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்! பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும் மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக ஒன்றிய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக் கனியாக மாறிவிடும்! தடுப்புச் சுவரை எழுப்பி எழுப்பி, பலரையும் பாதித் தூரத்திலேயே தடுத்து, கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்தி விடுவார்கள். இதைப் பற்றி கடந்த 2022-ஆம் ஆண்டு காந்தி கிராமம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா – அந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகிறார். அப்போது அவரிடம் நேரடியாகவே நான் வலியுறுத்தி இருக்கிறேன். மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய பண்பாடு இருக்கின்ற நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்கவேண்டும் - எந்த பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்குத்தான் இருக்கவேண்டும்! எனவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நம்முடைய போராட்டம் தொடர வேண்டும். அதற்கு தம்பி அன்பில் மகேஸ் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் ஊக்கமளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய இரண்டாயிரத்து 152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிப்பதை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்!

இங்கே இருக்கின்ற மாண்புமிகு திக் விஜய சிங் அவர்கள் உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவே பரிந்துரைத்திருக்கிற நிதிதான் அது! மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய ‘Petty Politics’-ற்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இதற்கு எதிராக, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரத்தான் போகிறது!  எப்படி, நாட்டிற்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்று, இன்றைக்கு இந்திய நாட்டின், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து இருக்கிறோமோ, அதேபோல, இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்று நான்  நம்புகிறேன்.” என்று ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com