கிளாம்பாக்கம்வரை மெட்ரோ ரயில்- விரிவான திட்ட அறிக்கை தாக்கல்!

மெட்ரோ சேவை விரிவான திட்ட அறிக்கை
மெட்ரோ சேவை விரிவான திட்ட அறிக்கை
Published on

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்துமுனையம்வரை மெட்ரோ இரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் முதல் கட்டத்தில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் முதன்மைச் செயலாளரும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக் சென்னை தலைமைச்செயலகத்தில் சமர்ப்பித்தார்.​

அப்போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மெட்ரோ இரயில் - மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை  உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசுக்கு முன்னர் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அது திருத்தப்பட்டு புதிய விரிவான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2, மேம்பாலச் சாலை நிலை-1 ஆகியவற்றில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலைப் போக்குவரத்தும் மெட்ரோ இரயில்சேவையும் கிடைக்கும்.

வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாகச் செல்லும்.

இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் : 15.46 கி.மீ

உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13

மதிப்பிடப்பட்ட நிறைவுச் செலவு: (மேம்பாலச் சாலை உட்பட) ரூ. 9,335 கோடி ஆகும். 

logo
Andhimazhai
www.andhimazhai.com