தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள் விவரம்:
* சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர், நூல் பல படைத்துள்ளவர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவராகத் திகழ்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவுபெறுவதை தொடர்ந்து அவர்தம் தொண்டுகளைப் போற்றி அவரது நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் தொண்டாற்றிய தமிழ் இசைப் பாடகர், திராவிட இயக்கக் கொள்கைகளை தனது தனித்துவமிக்க குரல் வளத்தால் இசைப் பாடல்களாக பாடியவர், “இசை முரசு” என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு பெருமைகள் கொண்ட இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி அன்னாரின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.