கும்பமேளாவில் குளிக்கப் போவதற்காகப் புறப்பட்ட கூட்டத்தால் தில்லி தொடர்வண்டி நிலையத்தில் நேற்று இரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின. இப்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்துள்ளன.
தில்லியிலிருந்து அயோத்திக்கு கும்பமேளாவையொட்டி நிறைய பக்தர்கள் அன்றாடம் கூட்டமாகச் சென்றுவரும் நிலையில், நேற்று இரவு இரண்டு தொடர்வண்டிகள் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டன. அதனால் இரவு 9.55 மணியளவில் இரண்டு நடைமேடைகளில் அளவுக்கதிகமான கூட்டம் கூடி நெரிசல் ஏற்பட்டது என்றும் உடனடியாக அவசரகால நடவடிக்கைக் குழுவினர் அங்கு களமிறங்கியதாகவும் தில்லி தீயணைப்பு மீட்புப் படை தலைமை அதிகாரி அதுல் கார்க் ஊடகத்தினரிடம் கூறினார்.
நெரிசலில் காயமடைந்தவர்கள் 11 பேர் முதலில் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து பலரும் அவசர ஊர்திகளில் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால் உயிரிழப்புகளைத் தடுக்கமுடியாதபடி நெரிசலின் கோரம் இருந்துள்ளது, வேதனையைத் தோற்றுவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத்சிங், தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா ஆகியோர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.