குறைகளை மறைக்க பட்ஜெட்டில் புதிய பெயர்கள் - கார்கே சாடல்!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Published on

இந்த "அறிவிப்பு செய்யும்" பட்ஜெட்டில், மேக் இன் இந்தியா திட்டத்தின் குறைபாடுகளை மறைக்க, அது தேசிய உற்பத்தி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அறிவிப்புகளும் கிட்டத்தட்ட இதுபோன்றவைதான் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குறைகூறியுள்ளார்.  

மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து:

“ கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து ₹ 54.18 லட்சம் கோடி வருமான வரியை வசூலித்துள்ளது, இப்போது 12 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சரே ஆண்டுக்கு ₹80,000 சேமிக்கமுடியும் என்று கூறுகிறார். அதாவது, மாதத்திற்கு ₹ 6,666 மட்டுமே!

முழு நாடும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினையால் போராடி வருகிறது, ஆனால் மோடி அரசாங்கம் பொய்யான பாராட்டுகளைப் பெறுவதில் குறியாக உள்ளது.

இளைஞர்களுக்கு எதுவும் இல்லை. இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஒரு பெரிய நடவடிக்கை எடுப்பதாக மோடி ஜி நேற்று உறுதியளித்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எந்தத் திட்டமும் இல்லை; விவசாய உள்ளீடுகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களில் சலுகை இல்லை. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்கு சுகாதாரம், கல்வி அல்லது உதவித்தொகைக்கான திட்டம் எதுவும் இல்லை.

தனியார் முதலீட்டை அதிகரிக்க எந்த சீர்திருத்த நடவடிக்கைகளும் இல்லை. ஏற்றுமதி மற்றும் வரிவிதிப்பு குறித்து சில மேலோட்டமான விஷயங்களைச் சொல்வதன் மூலம் அவர்களின் தோல்விகள் மறைக்கப்பட்டுள்ளன.

ஏழைகளின் வருமானத்தை அதிகரிக்க எதுவும் செய்யப்படவில்லை. தொடர்ந்து குறைந்து வரும் நுகர்வுக்கு தீர்வு காண ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. பணவீக்கம் உயர்ந்து வந்தாலும், MGNREGA பட்ஜெட் அப்படியே உள்ளது.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க எதுவும் செய்யப்படவில்லை. ஜிஎஸ்டியின் பல்வேறு விகிதங்களில் எந்த சீர்திருத்தமும் குறிப்பிடப்படவில்லை.

வேலையின்மையைக் குறைக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா, ஸ்கில் இந்தியா அனைத்து திட்டங்களும் வெறும் அறிவிப்புகளாகவே மாறிவிட்டன.

ஒட்டுமொத்தமாக இந்த #பட்ஜெட்2025 என்பது மக்களை முட்டாளாக்குவதற்கான மோடி அரசாங்கத்தின் முயற்சியாகும்.” என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com