கே.என். நேருவின் தம்பியைக் கூட்டிச்சென்ற அமலாக்கத் துறை!

கே.என். நேருவின் தம்பியைக் கூட்டிச்சென்ற அமலாக்கத் துறை!
Published on

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி இரவிச்சந்திரனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். 

சட்டவிரோதப் பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டில் கே.என். இரவிச்சந்திரன், நேரு, அவரின் மகன் அருண் நேரு எம்.பி. ஆகியோரின் இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அமைச்சர் நேரு, அவரின் மகன் இருவரின் இடங்களிலும் சோதனை முடிவடைந்தது. 

இரவிச்சந்திரனின் சென்னை அடையாறு வீடு, அலுவலகங்களில் இன்றும் இரண்டாவது நாளாகத் தேடுதல் சோதனை நடைபெற்றுவருகிறது. 

இந்தப் பின்னணியில் வீட்டில் வைத்து விசாரிக்கப்பட்ட இரவிச்சந்திரனை சிறிது நேரத்துக்கு முன்னர் அமலாக்கத் துறையினர் தங்கள் அலுவலகத்துக்குக் கூட்டிச்சென்றனர். 

முன்னதாக, 2013ஆம் ஆண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றதில் 22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நேரு குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிந்திருந்தது. அதிலிருந்து காற்றாலை மின்சாரம் வாங்கியதற்காகப் பயன்படுத்தப்பட்ட பணத்தை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுடன், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை இப்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com