சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதியின் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன் நிறைவாக, அமைச்சர் உதயநிதி தன் வசமுள்ள துறைகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மற்ற துறைகளைவிட அவரின் துறைகளுக்கு பல கோடிகள் ஒதுக்கப்பட்டிருப்பது, கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறையின் சார்பில் ஐந்து அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதன்படி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரையில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டப்படி ஷெல் நிறுவனத்தின் 2.5 கோடி ரூபாய் சிஎஸ்ஆர் நிதியின் மூலமாக நவீன கட்டமைப்புடன் உயர்திறன் மையங்கள் நிறுவப்படும். இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளம் பெண்கள், மகளிர் முன்னேற்றத்தை உறுதிசெய்யும்படியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் 2 கோடி ரூபாய் நிதியின் மூலம் செயற்கை நுண்ணறிவு உயர்திறன் மையங்கள் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டிலிருந்து நான் முதல்வனின் ஸ்கௌட் திட்டத்தின்படி அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 100 திறமையான இளநிலை மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து உலகளாவிய உள்ளுறைப் பயிற்சி வழங்கப்படும்.
தென்கொரியாவின் கேகோன் பல்கலைக்கழகம், டிஜிஎஸ்ஐடி பல்கலைக்கழகம், இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து ஹெரியாட் வாட் பல்கலை., சுவீடன் சாமர்ஸ் பல்கலை. ஆகியவற்றில் தலா 1.5 இலட்சம் ரூபாய் 100 மாணவர்களுக்கு 1.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* நகர, ஊரகப் பகுதிகளில் சேரும் திடக்கழிவுகளை மேலாண்மைசெய்ய தூய்மை இயக்கம் எனும் ஒருங்கிணைந்த புதிய இயக்கம் தொடங்கப்படும். அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
* நான் முதல்வன் திட்டப்படி 11 பல்கலைக்கழகங்களில் 1.1 கோடி ரூபாயில் செயல் மையங்கள் அமைக்கப்படும்.
* நான் முதல்வன் திட்ட பாடத்திட்ட சீரமைப்புப் பிரிவு, மதிப்பீட்டுப் பிரிவு அமைக்க 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.