சபாநாயகர் அப்பாவு மீது அதிருப்தி- பட்டியல்போட்ட வேல்முருகன்!

panrutti velmurugan
பண்ருட்டி வேல்முருகன்
Published on

சட்டப்பேரவையில் முறைப்படி அனுமதி கேட்டும் பேரவைத்தலைவர் அப்பாவுதனக்கு அனுமதி வழங்குவதில்லை எனதி.மு.க. கூட்டணிக் கட்சியானத.வா.க.தலைவர் வேல்முருகன் குறைகூறியுள்ளார். 

பேரவைக்கு இன்று வந்த அவர், சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவையில் தனக்கு பேசுவதற்கு பேரவைத்தலைவர் அப்பாவு முறைப்படி வாய்ப்பு தருவதில்லை எனப் பட்டியலிட்டார். 

”இன்று ஒன்றிய அரசைப் பற்றி பேச முயன்றபோது, நன்றி மட்டும் கூறி உட்காரச் சொன்னார். கடந்த வெள்ளியன்று என் தொகுதிப் பிரச்னைகளையும் புவிசார் குறியீடு பண்ருட்டி பலா பற்றிப் பேச முயன்றபோதும் என்னைப் பேசக்கூடாது என துண்டித்தார். பொறுத்துக்கொண்டேன். அன்று, கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி கேட்க கைதூக்கியபோது, அப்படி கேட்கக்கூடாது என கேள்வியை முழுவதுமாக அனுமதிக்கவில்லை. இது எந்தவிதமான ஜனநாயகம்? பேரவைத்தலைவரை நோக்கி இன்று இரு கைகளையும் குவித்துவிட்டு வந்துவிட்டேன். ஒருவனை மட்டும் பேரவைத்தலைவர் குறிவைத்து பேசவிடாமல் தடுப்பதை நான் எதிர்க்கிறேன். விதிகளின்படி நான் கேட்கிறேன். மற்றவர்கள் பெட்டிப்பாம்பு போல அடங்கிவிடுவதாகவும் வேல்முருகன் அடங்கவில்லை எனவும் அவர் நினைக்கிறார்போலும். இந்தக் கூட்டத்தொடரில் நான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து பேச வாய்ப்புக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன். இதே விசயங்களை மற்றவர்களிடம் சொல்லி பேசவிடுகிறார்கள். அதிலும் என்னுடைய பெயரைச் சேர்ப்பதில்லை. நான் இலவுகாத்த கிளி போலக் காத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து என்னுடைய வாய்ப்புகளை மறுக்கிறார்.” என்று வேல்முருகன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com