தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாக சர்ச்சையாகப் பேசியதையொட்டி யூட்டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குக் காரணம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் மாநகரக் காவல் ஆணையர் அருணும்தான் என்று ஊடகத்தினரிடம் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
அதையடுத்து நேற்று இரவு ஒரு பெண் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“ கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர 'யூட்டியூபர்' சவுக்கு சங்கரின் வீட்டைச் சூறையாடியது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரத்தில், சவுக்கு சங்கர் ஒருசார்பாகவும் பல்வேறு ஆதாரமற்ற கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட அணுகுமுறையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.” என்று சண்முகம் அதில் குறிப்பிட்டுள்ளார்.