சென்னையை அடுத்து சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்றுவந்த இரண்டாவது போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
”நிபந்தனை இன்றி அனைவரும் இன்று முதல் சம்பளத்துடன் வேலைக்கு வந்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது, நாளை வேலைக்கு அழைக்கும் பட்டியல் அறிவிப்பின் மூலம் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வார்கள்.” என்று சாம்சங் தொழிலாளர் சங்கத்தலைவர் முத்துக்குமார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
”மன்னிப்பு கோரினால்தான் உள்ளே அனுமதிப்பேன் என்ற சாம்சாங் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை திரும்பப்பெற அரசு அரசு மட்டத்தில் தொழிலாளத்துறை உட்பட உயர்மட்ட செல்வாக்கு மிக்கவர்கள் வற்புறுத்தியபோது நிர்வாகம் பணியவில்லை. ஆனால், சிஐடியு தலைமையிலான தொழிலாளர்களின் நேரடிக் களப்போராட்டம் பணிய வைத்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம்தேதி முதல் அக்டோபர் 15ஆம்தேதிவரை சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதையடுத்து வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம் நிர்வாகத் தரப்பில் உறுதிமொழியை மீறி சிக்கலை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து, தொழிலாளர் நலத் துறையைத் தலையிடக் கேட்டுக்கொண்டனர்.
அதன்பிறகு 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிருவாகத் தரப்பில் உடன்பாட்டுக்கு வரவில்லை.
இதனிடையே, தொழிலாளர் சங்கத்தின் 2 நிருவாகிகள், பின்னர் 20 நிருவாகிகளை சாம்சங் நிறுவனம் இடைநீக்கம் செய்தது.
நிருவாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த மாதம் 5ஆம் தேதி முதல் சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெ. சண்முகம் முதலிய இடதுசாரி தலைவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இந்த நிலையில், சிஐடியு தமிழகத் தலைவர் அ.சவுந்தரராஜனும் இன்று போராட்டத்தில் பங்கேற்றநிலையில், ஒருவழியாக போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.