சித்திரையில் தொடங்கும் புத்தாண்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம்வரை வாழ்த்து கூறவில்லையே என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கலாகக் கேட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இதுகுறித்து சரமாரியாக நயினார் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“ ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் நண்பகல் கடந்தும் தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் புறக்கணித்து வருகிறார். ஆங்கிலப் புத்தாண்டுக்கு அகிலமெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதலமைச்சருக்கு, ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்படும் தமிழர் கலாச்சார தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூற மனமில்லையா?” என்று நயினார் கேட்டுள்ளார்.
மேலும், தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் என்றும் அவர் எதிர்க்கேள்வியாகக் கூறியுள்ளார்.
ஆவின் பால் பைகளில்கூட புத்தாண்டு வாழ்த்துகள் பதியப்படவில்லை என்றும் நயினார் கூறியிருக்கிறார்.