சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நேற்று ஒருவன் அத்துமீறி அவருடைய முகத்தைத் துணியாமல் மூட முயன்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி முடித்து விடுதிக்குச் சென்ற பெண் மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் நேற்றிரவு தாக்கி அத்துமீறலில் ஈடுபட முயன்றது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.” என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கூறியுள்ளது.
அச்சங்கத்தின் மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண், ஆண் பயிற்சி மருத்துவர்கள் ஓய்வெடுப்பதற்கு பாதுகாப்புடன் கூடிய போதிய வசதிகள் உள்ள ஓய்வறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை.
அம்மருத்துவமனையில், தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் பாதுகாப்பானதாக இல்லை. பாதுகாப்பு ஊழியர்களும் இல்லை. அந்த அறைகளில் கழிப்பிட வசதிகள் கூட இல்லை .
இதன் காரணமாக பணியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் இரவில் தங்கள் விடுதிக்கு சென்று வரக்கூடிய சூழல் உள்ளது. இதுவே இம்மோசமான நிகழ்விற்கு மூல காரணம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு விடுதிக்கு சென்று கொண்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உடனடியாக பெண் பயிற்சி மருத்துவரை தாக்கியவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ”தமிழ்நாடு அரசின், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாதது, அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் இல்லாதது கவலை அளிக்கிறது. மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகளிலும், இதர மருத்துவமனைகளிலும், பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கு பாதுகாப்பான, போதிய வசதிகளுடன் கூடிய ஓய்வறைகளை வழங்கவேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.” என்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.