அணுசக்திக்கு எதிராக மக்களிடம் மேற்கொண்டுவரும் பிரச்சாரப் பணிக்காக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுப. உதயகுமாரனுக்கு சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தியற்ற வருங்காலத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும் நியூக்ளியர்ஃப்ரீபியூச்சர்(அணுசக்தியற்ற எதிர்காலம்) விருதானது ஜெர்மன் பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான கிளாஸ் பியகெர்ட்டால் 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அணுசக்தி காலகட்டத்தில் யுரேனியம் அகழ்வை நிறுத்தவும் அணுசக்தி மின்சாரம், ஆயுதங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் பாடுபடுவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
நடப்பு 2025ஆம் ஆண்டுக்கான விருது எதிர்ப்புப் பணிக்காக இந்தியாவின் சுப. உதயகுமாரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி எதிர்ப்புக் கல்விக்காக பிரேசிலின் நார்பெர்ட் சுச்சானக், தீர்வுக்காக ஜிம்பாப்வேயின் எட்விக் மட்சிமுரே ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
வரும் மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் விருது வழங்கும் விழா நடைபெறும் என்ரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயகுமாரனுக்கு சுற்றுச்சூழல், சமூகநீதிக்கான பிரச்சாரத்துக்காக இவ்விருது வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடங்குளம் கூடுதல் அணு உலைகளை அமைத்தபோது 2011ஆம் ஆண்டில் அடித்தட்டு மக்களைத் திரட்டி அமைதியான முறையில் போராடியதையும் அதைத் தொடர்ந்து அணுசக்தி, கதிர்வீச்சு பாதிப்பு, சூழல் அழிப்புக்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்துவருவதையும் விருது அமைப்பு குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.