சுய உதவிக் குழு பெண்கள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது!

சுய உதவிக் குழு பெண்கள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது!
Published on

மாநிலத்திலேயே முதல் முறையாக நடத்தப்படும் சுய உதவிக் குழு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி உட்பட பன்முக கலாச்சாரப் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. 

தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 3,29,039 மகளிர் சுய உதவி குழுக்களில் 37,76,575 மகளிரும், நகர பகுதிகளில் செயல்பட்டு வரும் 1,47,430 மகளிர் சுய உதவி குழுக்களில் 15,98,144 மகளிரும் தங்களது உற்பத்தி பொருட்களின் மூலம் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மகளிர் சுய உதவி குழு மகளிரும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பினை வழங்கி  வருகின்றனர்.                               

சுய உதவிக் குழு மகளிரின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் மன வளத்தையும், உடல் உறுதியையும் மேம்படுத்தவும், ஒற்றுமையை வளர்த்திடவும், சுகாதாரத்தினை பேணி காக்கும் வகையிலும் கால்பந்து, கோகோ, கபடி, குழுக் கோலம் (ரங்கோலி) மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய பன்முக கலாச்சாரப் போட்டிகள் ஊராட்சி/வட்டாரம்/மாவட்டம் மற்றும் 8 மண்டல அளவில் நடத்தி  முடிக்கப்பட்டன.  குறிப்பாக கால்பந்து, கோகோ, கபடி போன்ற போட்டிகள் முதன்முறையாக சுய உதவிக் குழு மகளிரிடையே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட / மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சுய உதவிக் குழுக்களில் உள்ள 400 மகளிர் பங்கு பெறும் கால்பந்து, கோகோ, கபடி, குழுக் கோலம் (ரங்கோலி), கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் சென்னை நேரு பூங்கா மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாநில அளவிலான- முதன் முறையாக நடைபெறும் இந்தப் போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com