‘சூட்டிங்கில் எடுத்த போட்டோவை வைத்து அரசியல் செய்யும் சீமான்’ – ஈழ புகைப்பட கலைஞர் சாடல்!

நாதக சீமான்
நாதக சீமான்
Published on

’எல்லாளன் ஆவணப்பட படப்பிடிப்பின் போது துப்பாக்கிகளை வைத்திருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோக்களை தாம் ஆயுதப் பயிற்சி எடுத்த போது எடுத்த படங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொய்யான கட்டுக் கதைகளை பரப்பி வருவதாக’ ஈழப் புகைப்படக் கலைஞர் அமரதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சன் நியூஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்:

“எல்லாளன் படத்தின் தொடக்க நிகழ்வில் சீமான் கலந்து கொண்டார். மூன்று நாள்கள்தான் அவர் படப்பிடிக்கு வந்தார். திரைப்பட உருவாக்க பணிக்காக அவர் வரவில்லை. படக்குழுவினரோடுதான் அவர் தங்கி இருந்தார்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஆயுதங்களோடு படம் எடுக்க வேண்டும் என சீமான் விருப்பப்பட்டார். ஆனால் உடனே எடுத்து தரவில்லை. அவருக்கு தூப்பாக்கி பிடிக்கத்தெரியவில்லை. துப்பாக்கி எப்படி பிடிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்த பிறகுதான் படம் எடுத்தேன். இப்போது, அந்த படத்தை வைத்து அவரும் அவரை சார்ந்தவர்களும் பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறனர்.

சீமான் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படத்தில், தெர்மாகோல் இருப்பதை பார்க்கலாம். அன்று எடுக்கப்பட்ட ஒர்க்கிங் ஸ்டில்ஸில் நானும் இருப்பேன்.

போர் முனையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்து சொல்வதற்காகத்தான் சீமான் அழைக்கப்பட்டார்.

ஈழத்தில் அவர் எவ்வளவு நாள் இருந்தார் என்பது தொடர்பாக அவரே முரண்பட்ட தகவலை சொல்கிறார். பிரபாகரன் ஆயுத பயிற்சி கொடுத்தார் என்பது உண்மை இல்லை. நடந்த சில சம்பவங்களை திரித்துதான் சீமான் சொல்கிறார்.

சீமான் ஈழத்திற்கு வந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு செயலகத்தில்தான் தங்கவைக்கப்பட்டார். ஆனால், இதை சீமான் எப்படி சொல்லியிருக்கிறார் என்றால், தன்னுடைய பாதுகாப்புக்காக இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டதாக சொல்கிறார். சீமான் இலங்கைக்கு வந்திருந்தபோது இவருக்கு மெய்காவலர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. சந்தோசுக்கு நடந்த விஷயங்களை தனக்கு நடந்ததாக அவர் சொல்கிறார்.

சீமானின் 6 புகைப்படங்களும் டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்டவை. இதை நிரூபிக்க முடியும். ஆனால், இந்த படங்களை அவருக்கு கொடுக்கவில்லை.

சீமான் ஈழப்பயணம் சார்ந்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறார்.

தங்களை சந்திக்க வருகின்றவர்களை விடுதலை புலிகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். பிரபாகரனுடன் சீமான் உணவு அருந்தியதாக தெரியவில்லை.

வன்னியில் பிரபாகரனை சீமான் சந்தித்தபோது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால், அந்த படங்கள் சீமானக்கு கொடுக்கப்படவில்லை. வெளிவந்துள்ள படங்களை அவர் எப்படி உருவாக்கினார் என்று தெரியவில்லை.

நாதக சீமானுடன் ஈழப் புகைப்படக் கலைஞர் அமரதாஸ்
நாதக சீமானுடன் ஈழப் புகைப்படக் கலைஞர் அமரதாஸ்

சீமான், விமானம் மூலமாகத்தான் இலங்கை வந்து சென்றார். அப்படி வந்து செல்லும்போது, இந்த படங்களை கொடுத்து அனுப்பினால், சிக்கல் வரும் என்பதால் அவருக்கு படங்களை கொடுக்கவில்லை. இந்த படங்களை கொடுத்தால் சீமான் விளம்பரப்படுத்திக் கொள்வார் என சேரலாதன் நினைத்தார். சீமானுக்கு நல்ல தலைமைப் பண்பு இருப்பதாக தெரியவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com