தி.மு.க. ஆட்சியைப் பற்றி சிலர் பேசுவதை சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதைப் போல என பூடகமாகவும் காட்டமாகவும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இன்று காலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இணைப்பு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியிலிருந்து வந்தவர்களை வரவேற்றபோதும், அக்கட்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்பவில்லை என்றார்.
அப்படிக் குறிப்பிட்டு இந்த மேடையை அவமதிக்க விரும்பவில்லை என்கிறபடியாகவும் பேசினார்.
மேலும், தன்னிடம் ஆளுநர் ஆர்.என்.இரவி குறித்து பலரும் அவர் இப்படிப் பேசுகிறாரே என அடிக்கடி கேட்பதாகவும், அவர் அப்படிப் பேசப்பேசத்தான் தி.மு.க. வளரும் என்று தான் பதில்கூறியதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த ஆட்சி முடியும்வரை இரவியையே ஆளுநராக இருக்க விடவேண்டும் என்றும் அதனால் தி.மு.க.வுக்குப் பலன்தான் என்றும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சரையும் தான் கேட்டுக்கொள்வது இந்த ஆளுநரே நீடிக்கட்டும் என்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாவது இந்த ஆளுநரை மாற்றுங்கள் எனத் தீர்மானம் போட்டிருக்கிறோமா? இதே ஆளுநர் தொடரவேண்டும்; ஆளுநர் உரையைத் தயாரித்துக் கொடுப்போம்; அவர் படிக்காமல் போகட்டும்; மக்களுக்குத் தெரியட்டும் என்றும் ஸ்டாலின் பேசினார்.
கட்சியில் சேர்ந்தவர்களுக்கு துண்டு அணிவித்து அவர்களை வரவேற்றார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, மாணவரணித் தலைவரும் முன்னாள் நா.த.க. ஒருங்கிணைப்பாளருமான இராஜீவ்காந்தி ஆகியோரும் பேசினர்.