அமலாக்கத் துறையின் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பிணை வழங்கவேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என அவரை திங்கள்கிழமைக்குள் பதில்கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் தொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால் திடீரென அமைச்சர் இரகுபதி அவருக்குப் பதிலாக சட்டவரைவைத் தாக்கல்செய்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான வரும் வியாழனன்றுதான் அமைச்சர்களின் மசோதா பதிலுரை இடம்பெறும். அது முடிந்தபின்னர்தான் சட்டவரைவு சட்டமாக ஆகமுடியும்.
அதற்கு முன்னரே நாளைமறுநாள் திங்களன்று செந்தில் பாலாஜியின் பதிலுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அவர் பதவிவிலகினால் மசோதாவுக்கான பதிலுரை அளிக்கமுடியாது.
அந்தச் சட்டம் கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குப் பதிலாக சட்ட அமைச்சர் இரகுபதி பாலாஜிக்குப் பதிலாக மருத்துவக் கழிவு தொடர்பான மசோதாவை அவையில் இன்று தாக்கல்செய்தார்.
எனவே, பாலாஜி மீண்டும் தன் பதவியிலிருந்து விலகவே வாய்ப்பு உண்டு என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.