சென்னை அண்ணாசாலை அருகிலும்,மதுரை மாவட்டம் – சோழவந்தான், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் ஆகிய இடங்களிலும் தலா ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ’முதலமைச்சர் சிறு விளையாட்டரங்களை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் இன்று காலையில் திறப்பு விழா நடைபெற்றது.
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில், குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 400 மீ நீள தடகள பாதை, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய ஆக்கி மைதானம், 2 கிரிக்கெட் பயிற்சி மைதானங்கள் ஆகியவை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கான 'முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தில்' இடம்பெற்றுள்ளன.
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் 200 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ மைதானங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 400 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கமும்,
தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 400 மீ தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கமும் திறந்துவைக்கப்பட்டன.
காணொலி மூலம் அந்த அரங்கங்களை துணைமுதலமைச்சர் சென்னையிலிருந்தே திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), ஊர்வசி.செ.அமிர்தராஜ் (திருவைகுண்டம்), எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம்), எஸ்.மாங்குடி(காரைக்குடி), காரைக்குடி மாநகராட்சி மேயர் சோ.முத்துத்துரை ஆகியோருடன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.