7 நாள்கள் தாண்டியும் தாக்குதல்... இஸ்ரேல்- ஈரான் போரின் விலை என்ன?

7 நாள்கள் தாண்டியும் தாக்குதல்... இஸ்ரேல்- ஈரான் போரின் விலை என்ன?
Published on

ஏழு நாள்கள் தாண்டியும் இஸ்ரேல்- ஈரான் போர்த் தாக்குதல் முன்னைவிட உக்கிரம் அடைந்தபடியே இருக்கிறது.

கடந்த வெள்ளியன்று ஈரானின் அணுசக்தி மையங்களைத் தாக்கி, முக்கியமான அணு விஞ்ஞானிகளையும் கொன்றது, இஸ்ரேல் இராணுவம். தன்னுடைய அணுசக்தி மையத்தைத் தாக்கியதால் ஈரானும் பதில் தாக்குதலில் இறங்கியது. சரமாரியாக 200 டிரோன்களை  ஏவி, இஸ்ரேலின் பெரு நகரங்களையும் அரசுக் கட்டடங்களையும் தாக்கி தன்னுடைய வலிமையைக் காட்டியது.

நேற்று வியாழன் நிலவரப்படி, கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் 240 ஈரானியர்களும் ஈரானின் பதில் தாக்குதல்களால் குறைந்தது 24 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் போர்த் தாக்குதலால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒரு பக்கம் இருக்க, இரு தரப்புகளுக்கும் கடுமையான நீண்ட கால பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதையும் வல்லுநர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை ஏற்கெனவே அந்நாட்டின் நாடாளுமன்றம்வரை பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு வலுவாக இருந்துவருகிறது. காசா மீதான போர் காரணமாக நாட்டில் பல பிரச்னைகள் உருவாகியுள்ளதுடன் இலஞ்ச ஊழல் பெருக்கெடுத்து அரசு நிர்வாகம் படுமோசமாக இருப்பதாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடிவருகிறார்கள். இப்போது ஈரானின் நேரடித் தாக்குதலையடுத்து, போரை நிறுத்து என இஸ்ரேல் மக்கள் தரப்பிலும் கோரிக்கை வலுத்துவருகிறது.

ஈழத்து இனப்படுகொலையில் இலங்கைப் படைக்கு இராணுவ உதவி செய்ததில் முக்கியப் பங்காற்றிய இஸ்ரேல் அரசு, முன்செய்த வினைக்கு எதிர்வினையாக, சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக அலையவிட்டுள்ளது. வானுயர இருந்த கட்டடங்களை ஈரான் தாக்கியதால் வீடுகளை இழந்த மக்களும் தாக்குதல் அச்சத்தில் வீடுகளைக் காலிசெய்தவர்களுமாக இஸ்ரேலின் கடற்கரையோரம் குடில் அமைத்து தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கைப்பாவையாகவும் தானாகவும் இஸ்ரேல் அரசு நடத்தும் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட நீண்ட கால நிதித் திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள போர் தெண்டச் செலவு

கடந்த 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடங்கிய கொடூரமான இராணுவத் தாக்குதலிலிருந்து இன்றைக்கு காசாவைத் துடைத்து அழித்ததைப் போல ஆக்கியநிலையில், ஈரானோடு மோதி இன்னொரு போரைத் தொடங்கியுள்ளதுவரை இஸ்ரேல் ஏகப்பட்ட செலவை எதிர்கொண்டுவருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேலின் வணிக இதழ் கல்காலிஸ்ட்டின் தகவலின்படி, பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலால் மட்டும் 67.5 பில்லியன் அதாவது 6,750 கோடி டாலர் அதற்கு தெண்டச் செலவாகியுள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேலின் ஒய்நெட் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானுடனான போரில் முதல் இரண்டு நாள்களில் மட்டும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட செலவு 145 கோடி டாலர். காசா மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்புப் போரில் ஏழு வாரங்களுக்கு ஆன செலவையும் இது மீறிவிட்டது என்கிறது அல்ஜசீரா ஊடகம்.

ஈரானைத் தாக்கத் தொடங்குவதற்கு முன்னரே, இஸ்ரேல் தன்னுடைய இராணுவ பட்ஜெட்டை அதிகரித்தபடி இருந்துவருகிறது. காசா மீது தாக்குதலைத் தொடங்கியபோது 1700 கோடி டாலராக இருந்த அதன் இராணுவ பட்ஜெட், கடந்த ஆண்டில் 2800 கோடி டாலராக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் 3400 கோடி டாலராக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

4.9% ஜிடிபி பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டில் இஸ்ரேலின் ஜிடிபியில் 4.9 சதவீதம் அதாவது 2760 கோடி டாலர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அந்நாட்டு நிதியமைச்சகம் கணக்கு சொல்கிறது. தேவையே இல்லாத இந்த ‘அதிகப்படியான இராணுவச் செலவுகள்தான் இதற்குக் காரணம்’ என்பதையும் இஸ்ரேல் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

60,000 நிறுவனங்கள் மூடல்

இது ஒரு பக்கம் இருக்க, ஆள் பற்றாக்குறை, போக்குவரத்து, காரணமாக, கடந்த ஆண்டில் 60 ஆயிரம் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன என்கிறது அந்நாட்டின் வணிக ஆய்வு நிறுவனமான கோஃபேஸ்பிடிஐயின் தகவல். இது மட்டுமல்ல, 2023ஆம் ஆண்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிக மோசமான அளவுக்குக் குறைந்துவிட்டதும் இன்னொரு பொருளாதார இழப்பு என்கிறார்கள்.

இந்த நிலையில் ஈரானுடன் போரில் குதித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகவே செய்யும் என்பதில் ஐயமே இல்லை.

கடந்த செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக பிரபல தரவரிசை நிறுவனமான எஸ் அண்ட் பி, இஸ்ரேலின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியிருப்பதாக எச்சரித்துள்ளது.

மைனஸ் ஆகும் கடன் திறன் 

ஈரானுடனான போர் தொடரும்பட்சத்தில் இஸ்ரேலின் கடன் செலுத்தும் திறனும் ஏ என்கிற நிலையிலிருந்து ஏ மைனஸ் என்கிற இடத்துக்குச் சரிந்துவிடும்; அப்படியொரு சூழல் உருவானால் ஏராளமாக கடனை வாங்கவேண்டிய நிலை உருவாகும்; அதனால் நாட்டின் பொருளாதாரத்தை நம்பி முதலீட்டாளர்கள் வருவது பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

போரால் ஈரானுக்கு என்ன ஆகும்?

ஏற்கெனவே பொருளாதாரத் தடை காரணமாக முடங்கியநிலைக்குப் போன ஈரானின் பொருளாதாரம் புதிய போர் காரணமாக புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அண்மைக்காலமாகவே, ஈரானின் கச்சா பெட்ரோலிய ஏற்றுமதி குறைந்துவருகிறது. கடந்த ஞாயிறன்று முடிவடைந்த காலப் பகுதியில் 1.02 இலட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டு வர்த்தகத்தில் 2.42 இலட்சம் பேரல்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கிறது கிப்ளர் பகுப்பாய்வு அறிக்கை.

90% ஏற்றுமதி?

ஈரானின் மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதம் நடைபெறும் கார்க் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது என செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு எல்எஸ்இஜி கூறுகிறது.

இந்த ஆண்டில் இதுவரை ஈரான் 34 இலட்சம் பேரல் கச்ச பெட்ரோலியத்தை உற்பத்தி செய்துள்ளது என்கிறது அமெரிக்காவின் ஆற்றல் தகவல் நிருவாகத்தின் தரவு. ஈரானிடமிருந்து அதிகமான அளவில் கச்சா பெட்ரோலியத்தை வாங்கிய வெளிநாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஈரானின் பெருமளவிலான பெட்ரோலிய உற்பத்தி அந்நாட்டின் உள்நாட்டுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.            

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலால் தாக்கப்பட்ட தெற்கு பார்ஸ் எரிவாயுக் களத்தில் ஈரான் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளது. கத்தார் நாட்டுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள இந்த எரிவாயுக் களம், உலகின் மிகப் பெரியதுமாகும். ஈரானின் மொத்த எரிவாயு உற்பத்தியில் 80 சதவீதம் அளவுக்கு இங்குதான் கிடைக்கிறது.

இத்துடன் தலைநகர் டெக்ரானுக்கு அருகில் உள்ள சார் ரே சுத்திகரிப்பு ஆலை மீதும் இஸ்ரேல் கண் வைத்திருக்கிறது. தொடர்ச்சியான இந்தத் தாக்குதல்களில் சேத விவரம் சரிவரத் தெரியவில்லை.        

முடக்கிவைத்த பொருளாதாரத் தடை

ஈரானில் 1979இல் ஏற்பட்ட இசுலாமியப் புரட்சிக்குப் பிறகும் அதன் அணுசக்தித் திட்டம் காரணமாகவும் அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் இராணுவ வலிமையால் பல்வேறு உலக நாடுகளையும் ஈரான் மீது தடைவிதிக்கவும் செய்தது.

குறிப்பாக, ஒபாமா காலத்தில் ஈரானுக்கு கடுமையான சவால்கள் ஏற்பட்டன. 2015இல் அமெரிக்கா, இரசியா, சீனா உட்பட்ட நாடுகளுடனான கூட்டுத் திட்டத்தில் இணைந்த பின்னர் தடை கொஞ்சம் தளர்த்தப்பட்டது.

ஆனால் டொனால்டு டிரம்ப் 2018இல் அதிபராக ஆனதும் மீண்டும் தடைகளை விதித்தார். அமெரிக்கக் கூட்டாளி நாடுகள் பலவும் ஈரானிடம் கச்சா பெட்ரோலியத்தை வாங்குவதை நிறுத்திக்கொண்டன.

10% உற்பத்தி மட்டுமே!

கடந்த 2022,23 காலத்தில் ஈரானின் மொத்த பெட்ரோலிய ஏற்றுமதி 5000 கோடி டாலர் மட்டுமே! அதாவது நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் பேரல்கள் மட்டுமே உற்பத்தி. இது பத்தாண்டுகளுக்கு முன் 2016இல் இருந்த அளவில் 10 சதவீதம்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  

பொருளாதாரத் தடையால் அந்நியச் செலாவணி மூலமான வருவாயும் குறைந்துவிட்டது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஈரானுக்குத் துணையாக இருந்து சீனா உட்பட்ட சில நாடுகளின் உதவிதான்.

இந்தப் பொருளாதாரத் தடை காரணமாக நாட்டின் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி கடுமையாக பாதித்துள்ளது. 1980 ஈராக்குடன் போர் நடந்த காலத்தைவிட அதிகமான சவால்களைச் சந்திப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசிஸ்கியான் கூறியுள்ளார். இவர் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தொடர்ந்து கவனப்படுத்திவருகிறார்.

மின்சாரம், பாசனம் அதோ கதி!

பொருளாதாரப் பிரச்னை எனப் பொதுவாக மட்டுமில்லாமல், எரிசக்தி, குடிநீரும் ஈரானுக்குப் பெரும் சிக்கல்களாக உருவெடுத்துள்ளன.

முதலீடு குறைந்ததன் காரணமாக எரிவாயு உற்பத்தி, பாசனக் கட்டமைப்பு பாதிப்பு, மின்சாரத் தடை ஆகியவை உடனடிப் பிரச்னைகளாக மாறிநிற்கின்றன.

இதனிடையே ஈரானின் நாணயமான ரியால், 2018இல் மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து அதன் முந்தைய மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது முக்கியமான எடுத்துக்காட்டு.

பணவீக்கம், வறுமை

நாட்டின் பணவீக்கம் 40 சதவீதமாக உள்ள நிலையில், இது 50 சதவீதத்தை எட்டும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.   

இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது கடுமையான செலவாக மாறியுள்ளது. அதுவும் நெருக்கடியாக இருக்கிறது.

தற்போது நாட்டின் மக்கள் தொகையில் 22 முதல் 27 சதவீதம்வரை வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்கிறது ஈரானின் தொழிலாளர்- சமூக நலத்துறை.

வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதமாக இருக்கிறது என்கிறது இன்னொரு தரவு. இதையும் தாண்டியதாக இருக்கும் என்கிறது ஈரானின் பணியாளர் பிரதிநிதிகளின் உயர் அமைப்பு.

ஈரான் இப்போதைக்கு சிறு அளவுதான் இராணுவத்துக்கு ஒதுக்குகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5 சதவீதம் ஒதுக்கும்நிலையில், சுமார் 1200 கோடி டாலர்களாக இருக்கும் என்பது ஒரு துறைசார் புள்ளிவிவரம்.

ஈரானிடம் இப்போது கையிருப்பாக 3300 கோடி டாலர் அந்நியச் செலாவணி இருக்கிறது. இதை குறுகிய கால இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்தினால் ஈரானின் நீண்ட கால நலன்களுக்கு பாதகமாக ஆகிவிடும் என அல்சசீரா ஊடகத்திடம் கூறியிருக்கிறார், டிஎஸ் லம்பார்டு நிறுவனத்தின் பொருளாதார ஆய்வாளரான ஹம்சே அல் காவோடு.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com