சாகித்ய அகாதெமி விருதுத் தகுதி... எழுத்தாளர்கள் பஞ்சாயத்து!
சாகித்திய அகாதெமியின் இளைஞர், சிறார் இலக்கிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்காரும் இலட்சுமிஹருக்கு யுவ புரஸ்காரும் அறிவிக்கப்பட்டுள்ளன.
யுவபுரஸ்காரில் கடைசிச் சுற்றில் மொத்தம் ஒன்பது படைப்புகள் பரிசீலனைக்குப் பரிந்துரைக்கப்பட்டன. அதில், அ.பிரகாஷ், சிவச்செல்வி செல்லமுத்து, வைரவன் எல் ஆர், இலட்சுமிஹர் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகளும், பெஜோ சைலின், முத்துராசா குமாரின் நாவல்களும், சி.துரை, சதீசுவரன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. இதில் விருதுக்குரியதை பேரா. மதிவாணன், ஆர்.குருநாதன், எஸ்.சண்முகம் ஆகியோரைக் கொண்ட குழு தேர்வுசெய்தது.
இதைப் போல, பால புரஸ்கார் விருதுக்கான இறுதிச் சுற்றிலும் ஒன்பது படைப்புகள் இடம்பிடித்திருந்தன. வெளியான ஆண்டுப்படி அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்த பட்டியலில், நாணற்காடன் எழுதிய ஒரு கதை சொல்லுங்க மாமா எனும் சிறுகதைத் தொகுப்பு இருந்தது. மற்றவை நாவல்கள். பூபதி பெரியசாமியின் யானையை வென்ற எறும்புகள் நூல் கதை பட்டியலில் இடப்பட்டிருந்தது.
தேர்வுக்குழுவில் இருந்த ஜி. மீனாட்சி, யூமா வாசுகி, சோ.தர்மன் ஆகியோர் எழு நாவல்களில் ஒன்றை எழுதிய விஷ்ணுபுரம் சரவணனைத் தேர்ந்தெடுத்தனர்.
விருது பெற்ற இருவருக்கும் சக படைப்பாளிகள், வாசகர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர், முதலமைச்சர்வரை பாராட்டுகளைக் குவித்துவிட்டனர். இன்னும் பாராட்டுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
ஆனாலும் என்ன... விருதுகள் என்றாலே சர்ச்சைகளும் கூடவே சேர்ந்து வரத்தானே செய்யும்!
ஆமாம், அப்படி வராமல் இருந்தால்தானே ஆச்சரியம் என்கிறீர்களா?
அதுவும் சரிதான்!
பொதுவாக, எழுத்தாளர்கள் இடையே தனக்கு விருது தரவில்லையே, அங்கீகாரம் அளிக்கவில்லையே என்கிற குரல் பூடகமாக வெளிப்படும். பல நேரங்களில் மூத்த- நெடுங்காலம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படும் எழுத்தாளர்களே அதிருப்தி உணர்வை வெளிக்காட்டுவார்கள்.
இந்த முறை ஓர் இளம் எழுத்தாளரே தன் மனக்குமுறலை இன்றே கொட்டித் தீர்த்துவிட்டார். இது சமூக ஊடகக் காலகட்டமும் அல்லவா?
குமுறித் தீர்த்தவர், றாம் சந்தோஷ். ஆம், பெயரை இப்படித்தான் நூல்களில் வெளியிட்டுவருகிறார்.
நேரடியாகவே, அவர் தன்னுடைய கேள்விகளை சாகித்திய அகாதெமியை நோக்கி வைத்துவிட்டார்.
கூடவே, தனக்கு என்ன தகுதி இல்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
இதில், எழுத்தையும் படைப்பையும் தாண்டி, அவர் குறிப்பிடும் சில விசயங்கள் இடறவும் செய்கின்றன. கூட்டங்களில் பேசுவது, கல்லூரிகளுக்குப் போய்ப் பேசுவது என்பனவற்றை எல்லாம் அவர் தன்னுடைய தகுதிகளாகக் குறிப்பிட முயல்கிறார்.
தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய ஆதங்கப் பதிவு, அப்படியே இங்கே:
“ சாகித்திய அகாதெமிக்கு ஒரு சலாம்!
2025 - ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கிடைக்கும் ஆறுதல் பரிசான ‘குறும்பட்டியலில் பெயர்’ என்பது கூட இந்த முறை எனக்குக் கிடைக்கவில்லை. கவிதை, புனைவு, அல்புனைவு, மொழிபெயர்ப்பு, கலை நூலாக்கக்கங்கள், பதிப்பு, பேச்சுபெயர்ப்பு (Interpretation), விமரிசனம் என கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து உழைத்து வருகிறேன். தமிழ் (மொழியியல்) ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகிறேன். தமிழின் முக்கியமான அனைத்து சிற்றிதழ்கள், ஆய்விதழ்கள், நாளிதழ்களிலும் எழுதி இருக்கிறேன்; தொடர்ந்து எழுதிவருகிறேன்; நான் அழைக்கப்படாத இலக்கிய மேடைகள் இல்லை; அன்றி, எவ்வளளோ முக்கிய கல்வி நிறுவனங்களில் பேசி இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நான் எழுதி அச்சானவை மட்டுமே 1400 பக்கங்களுக்கும் அதிகம். இன்னும் இன்னும் எழுதிக் கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கிறேன்.
ஆனால், தொடர்ந்து ஆய்வு நீங்கலாக எனது எந்த இலக்கியப் பணிகளுக்கும் அந்த தனியார் அமைப்பும், அரசு அமைப்பும் இதுநாள் வரை விருது அளிக்கவில்லை. அளித்த ஒரேவிருதான ஆத்மாநாம் விருது, காரணமின்றி, நான்காண்டுகள் எனக்கு ஒரு லட்சம் பணம் தராமல் ஏமாற்றிய கதை ஊரறியும். ஆத்மாநாம் அமைப்பு அப்படி செய்தது?? ஏனைய அமைப்புகள் ஏன் என்னை, எனது நூல்களை அங்கீகரிக்கவில்லை; நான் தரமற்று எழுதுகிறேனா?? என்னைப் போன்ற அமைப்பு சாரா, பொருளாதார அந்தஸ்து இல்லாத, அதிகார பலம் இல்லாத, நூல் தறிக்காத, தன்மானம் உள்ள எழுத்தாளன் என்ன எழுதினாலும் அவன் புறக்கணிக்கப்படத்தான் லாயக்கா??? தனியார் அமைப்பு விருதுகளை என்னைப் போன்றவர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்றால், அரசு பணத்தில் இயங்கும் சாகித்திய அகாதெமி ஏன் என்னை இத்தனை ஆண்டுகள் புறக்கணித்து வருகிறது?? ஏன் இந்தியக் குடிமகனாக நான் விருதைப் பெறக்கூடாதா?? அதில் பொறுப்பில் உள்ள கல்வியாளர்களுக்கும், தேர்வாளர்களுக்கும் என் எழுத்து அவ்வளவு மலிவானதாகப்படுகிறதா?? எந்தப் பின்னணியும் இல்லாத றாம் சந்தோஷ் போன்றவர்கள் எல்லாம் உங்களுக்கு வளரவே கூடாதா???
-------
நான் கீழே தரும் பட்டியலைப் பாருங்கள். ஓர் வசதிக்காக கவிஞர், எழுத்தாளர் என்று பிரித்து ஒரு பட்டியல் தருகிறேன். இவை தமிழ் - விக்கி பார்த்து எடுத்தவை. இந்தப் பட்டியலைப் பார்த்தாலே நான் எழுத வந்த காலம் தொடங்கி, முதல் நூலை வெளியிட்ட காலம் வரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தெரியவரும்.
என்னோடு எழுதவந்த, எனக்கடுத்து எழுத வந்த, பொழுதுபோக்குக்காக எழுதுக்கொண்டிருக்கிற என்ற மூன்று வகை இளம் எழுத்தாளர்களுமே இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.
இவர்கள் யாரைவிட என் எழுத்துக் குறைவாகிப் போனது???? ஏன் இந்த பாரா முகம் இலக்கிய முகவர்களே???ஏன் இப்படிச் செய்கிறீர்கள் இலக்கியப் ‘பெரியவர்களே’??ஏன் இப்படிச் செய்கிறீர்கள் இலக்கியப் ‘பீடங்களே’??ஏன் றாம் சந்தோஷ் அங்கீகரிக்கத் தகுதியற்றவனா??ஏன் றாம் சந்தோஷ் எழுத்து முக்கியமில்லாதவையா??ஏன் றாம் சந்தோஷ் எழுத்தின் பொருட்டு எந்த சந்தோஷத்தையும் பெற லாயக்கற்றவனா??ஏன்?? ஏன்???யார் செ))த்தப் பின்பு கோடி போட நீங்கள் எல்லாம் முந்துவீர்கள்???
- றாம் சந்தோஷ் வடார்க்காடு
18.06.2025” என அவருடைய முகநூல் பதிவு முடிகிறது.
உடனே, அவருடைய வாசகர்களும் சக படைப்பாளிகளும் தோழிகளும் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றுவதில் இறங்கினார்கள்.
நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அவருடைய பதிவில் மற்றவர்கள் தேறுதல் வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும், இடுகையிட்ட பிறகு பதிவரை ஆளையே காணோம் என்கிறபடி அந்தப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை!
ஆனால், அவரின் வாசகர்களோ ஆங்காங்கே இதைப் பற்றி கிடந்து மூச்சைப்பிடித்துக்கொண்டு விவாதித்தபடி இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது நாளை இன்னும் தெளிவாகத் தெரியவரும்!
அதுவரை இந்த சர்ச்சை நிற்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி!