பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை தொலைபேசி மாநில 9ஆவது மாநில மாநாடு சென்னையில் திங்களன்று நடைபெற்றது. இம்மாநாட்டை சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது, “4ஆம் அலைக்கற்றைச் சேவை வந்த பிறகும் தொலைபேசியில் சரியாகப் பேச முடியவில்லை. கண்ணாடியிழை - பைபர் இணைப்பு வாங்கியவர்களுக்கு தரமான சேவை தரமுடியவில்லை. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். நுகர்வோர்கள் தனியார் நிறுவனங்களிடம் செல்கின்றனர். பி.எஸ்.என்.எல். இழப்பைச் சந்திப்பதற்கு அரசு, நிர்வாகத்தின் தவறான கொள்கைகளே காரணம்.” என்றார்.
”தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும்வகையிலேயே மத்திய அரசு செயல்படுகிறது. ஜியோ நிறுவனம் 25 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தியபோது ஒரு கோடி வாடிக்கையாளர்கள் அதிலிருந்து விலகி பி.எஸ்.என்.எல். இணைப்பைப் பெற்றனர்.
மக்கள் பொதுத்துறையை விரும்புகின்றனர். அரசின் செயல்பாடு அதற்கு நேர்மாறாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகளை வாங்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அனுமதி தர மறுக்கிறது. பி.எஸ்.என்.எல். சேவையைத் திட்டமிட்டு மத்திய அரசு முடக்குகிறது.” என்று அபுமன்யு பேசினார்.