டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றச் சொல்லவில்லை- இரகுபதி

அமைச்சர் ரகுபதி - எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் ரகுபதி - எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க.வினர் இன்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டாஸ்மாக் ஊழல் விவகாரம் பற்றி அவர் கூறியது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி பேரவை வளாகத்துக்கு வெளியே விளக்கம் அளித்தார். 

அப்போது அவர் கூறியது:

“எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமும் இல்லை - வழியில் பயமும் இல்லை. எங்களது கவுன்டரை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை - எங்களது கோரிக்கையையும் அவர் பார்க்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் பொறுத்தவரைக்கும் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்திற்கு சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால், அண்ணா திமுகவின் பொது செயலாளராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழக்கை அன்றைக்கு வேறு மாநிலத்திலேயே விசாரிக்க வேண்டும் - தமிழ்நாட்டில் விசாரித்தால் சரியாக இருக்காது என்று வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கைப் பற்றி நாங்கள் கேட்கவே இல்லை. எங்களுடைய கோரிக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதுதான். அதை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.” என்று அமைச்சர் இரகுபதி கூறினார். 

மேலும், ”அடுத்ததாக டாஸ்மாக்கை ரெய்டு பற்றி 2016-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தினார்கள். ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே அவர்கள் வெளியிடவில்லை. என்ன கணக்குகள் கைப்பற்றினோமா? எவ்வளவு தொகை அங்கே முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை. அன்றைக்கு ஒருவர் சொன்னார் - பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார். அதைத்தான் அடுத்து ED சொன்னது. அதாவது அண்ணாமலை என்ன சொன்னாரோ அது ED சொன்னது. அதற்குப் பிறகு டெல்லிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதை ஆயிரம் கோடி என்றார். அதாவது அவர்களுக்கு உள்ள தொடர்பு அதன் மூலமாக தெரியுமே தவிர நிச்சயமாக எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறை கூடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும் எங்களுடைய தலைவர் இடம் கொடுக்கவில்லை. முதலமைச்சரோ, அரசோ இடம் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் வழக்கை அவர்கள் தொடர்ந்தால் வழக்கில் நிரூபிக்க முடியும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம்.

அதனால், சட்டமன்றத்தில் டாஸ்மாக்கை பற்றி பேசவில்லை – எங்களை அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார். நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கைப் பற்றி விசாரிக்கக் கூடாது. உடனே அவர் சொல்கிறார் - நீங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நாங்கள் ட்ரான்ஸ்ஃபர் பெட்டிஷன் போடவில்லை கவுண்டரில் தான் சொல்லி இருக்கிறோம்.  இது போன்று ஒரே இடத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரியுங்கள் என்று அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்றும் அமைச்சர் இரகுபதி கூறினார். 

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 

கேள்வி - படகுகளை எல்லாம் அரசுடைமை ஆக்கியிருக்கிறார்கள் அதையெல்லாம் நாம் கேட்டிருக்கிறோமா? மீனவர்களை மட்டும் விடுவியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் - லட்சக்கணக்கான மதிப்புள்ள படகுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் - அது பற்றி

பதில் – நாங்கள் லட்சக்கணக்கான படகுகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தரவில்லை. எனவே தான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டு வந்த மீனவர்களுக்கெல்லாம் யார் யார் படகுகள் சேதம் அடைந்ததோ, அங்கு பறிமுதல் செய்யப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி தந்திருக்கின்ற, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம்  நம்முடைய தமிழ்நாடு தான்.

கேள்வி - தொடர்ந்து அமலாக்கத்துறை திரு.கே.என்.நேரு அவர்களின் வீட்டிலும் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது – அவர்களின் உறவினர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது இந்த சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் - அமலாக்கத்துறை என்பது நம்முடைய அண்ணா திமுகவைப் போல பாரதிய ஜனதாவின் ஒரு கூட்டணி கட்சி. அது போல, சந்திரபாபு நாயுடு அவர்களின் கட்சியைப் போல, நிதிஷ் குமார் கட்சியைப் போல அமலாக்க துறையை ஒரு கூட்டணியாக தான் பார்க்கிறோமே தவிர, வேறு எதுவும் இல்லை. அதுவும் இன்றைக்கு அரசியல் முத்திரை குத்தப்படாத ஒரு கூட்டணிக் கட்சி.

கேள்வி - சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பை கேட்டார்கள் - நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக வேறு மாநிலத்திற்கு மாற்றுகிறீர்கள் என்று அவர் சொன்னார் - அதற்கு நீங்கள் உள்ளேயே பதில் கூறி இருக்கலாமே - இது போன்று நாங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று.... அது பற்றி

பதில் - எங்களது கவுண்டரில் நாங்கள் சொல்லி இருக்கின்றோம் அதை அவர் சரியாகப் பார்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறார்களே தவிர எங்கள் கவுண்டரை அவர் படித்துப் பார்த்து இருக்க வேண்டுமே அல்லவா?

கேள்வி - நீங்கள் சொல்வது போல் திமுக ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடும் ஊழலும் நடைபெறவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து விசாரிப்பதற்கு பதிலாக அமலாக்கத்துறை மொத்தமாக இந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்று ஃபைல் செய்திருக்கிறீர்கள் ஏன் இந்த பெட்டிஷன் செய்திருக்கிறீர்கள் அது பற்றி

பதில் - ED பெட்டிசனை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த வழக்கை தொடர்ந்து அவர்கள் எங்களை துன்புறுத்தல். அச்சுறுத்தல் கொடுக்கக் கூடாது என்பதற்காக ED மீது வழக்கு தொடுத்திருக்கிறோம். அடுத்து, ஒரு விசாரணை என்று வரும் பொழுது உச்ச நீதிமன்றம் என்றால் இறுதி தீர்ப்பாக முடிந்துவிடும். எனவே தான், உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும், ஏன் இந்த பிரச்சனையை வளவளத்து கொண்டே செல்ல வேண்டும் என்றும், எங்களுக்கு பயம் கிடையாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதலமைச்சர் அவர்களின் திட்டவட்டமான முடிவு.

கேள்வி - உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது ஏதேனும் பிரச்சனை இருக்குமா அல்லது என்ன காரணம் அது பற்றி …

பதில் - நேற்றைக்குக் கூட ஒரு வழக்கறிஞர் திடீரென்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் சகோதரர் தற்போது இருக்கின்ற வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞர் என்று. இப்படி எல்லாம் பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி, அந்த வழக்கை இழுத்தடிப்பதை விட உச்சநீதிமன்றத்தில் ஒரேடியாக வழக்கை முடித்து விட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

கேள்வி - சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தால், சரியாக இருக்காது என்று திமுக நினைக்கிறதா அது பற்றி…..

பதில் – இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதிகள் நியாயத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் - இரவு பகல் பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் – நல்லவர்கள். எனவே, அவர்களின் தீர்ப்பின் மீது எந்தவித சந்தேகமும், அவர்கள் நடவடிக்கைகளை அரசுக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது - அவர்களுக்கும் எந்தவிதமான கெட்ட பெயர்களும் வந்து விடக்கூடாது. அதே நேரத்தில், இது போன்ற நீதிபதியின் சகோதரர் இவருக்கு வழக்கறிஞராக இருக்கிறார் என்று ஒரு மனு போடுகிறார் - இப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட பழிச்சொல்  எல்லாம் யாருக்கும் வர வேண்டாம். நிம்மதியாக இந்த வழக்கை முடிப்போம் - உச்சநீதிமன்றத்தில் முடிப்போம் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

கேள்வி – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றுவார்களா? இல்லை என்றால் நீதிபதி விளக்கிக் கொள்வார்கள். ஆனால், நீங்களே இந்த வழக்கில் முந்துவதற்கு என்ன காரணம்? அது பற்றி

பதில் - நாங்கள் முந்தவில்லை – நாங்கள் முதலில் ஒரு நீதிபதி அமர்வு விசாரித்து STAY கொடுத்த பிறகு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. இப்படியெல்லாம் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறோம்.

கேள்வி - இந்த எஃப்.ஐ.ஆர் எல்லாம் 2016 முதல் 2021 வரையிலானதா? அதில் எத்தனை எஃப்.ஐ.ஆர் இருக்கிறது? அது பற்றி ….

பதில் - எத்தனை எப்.ஐ.ஆர் என்பது பற்றி நீங்கள் அமலாக்க துறையை தான் கேட்க வேண்டும். அது பற்றி அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

கேள்வி - இந்த ஊழல் முறைகேடு என்பது எந்த காலகட்டத்திற்கு உரியது என்று பார்க்கிறீர்கள். அதை விசாரிப்பதால் என்ன பிரச்சனை இருக்கிறது அது பற்றி….

பதில் - அதில் ஒன்றும் பிரச்சனை கிடையாது. அதனால் தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரே அடியாக தீர்வு காணவேண்டும் - யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட  வேண்டும்.

கேள்வி - அந்த Jurisdiction-ல் தானே விசாரிக்கப்பட வேண்டும் அது

பதில் - உச்ச நீதிமன்றம் அனைத்து Jurisdiction-லும் விசாரிக்கலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த வழக்கையும் விசாரிக்கின்ற அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது. அதனால் Jurisdiction என்ற கேள்வியே கிடையாது.

கேள்வி - கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அது பற்றி ….

பதில் -

இன்றைக்கு வழக்கு அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும்போது சொல்லக்கூடிய ஒன்று தான். அப்படி நடந்திருந்தால் அதை விசாரிக்கட்டும் அதைப் பற்றிய கவலையே கிடையாது.” என்று இரகுபதி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com