தமிழகத்தில் 36.6% காசநோயாளிகள் புலம்பெயர் பணியாளர்கள்- ஐ.நா. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

TB
காசநோய்
Published on

ஐ.நா. சபை உதவியுடன் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வில் தமிழகத்தில் காசநோயாளிகளில் 36.6 சதவீதம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP), ஐக்கிய நாடுகள் சபையின் STOP TB Partnership ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர்வரை இந்த முன்னோடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முக்கிய தொழில் மையங்களாக விளங்கும் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ரீச்’  (Resour ce Group for Education and Advocacy for  Community Health - REACH) நிறுவனமும் இணைந்துகொண்டது. 

இதில், மொத்தம் 11,564 காசநோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் (77 சதவிகிதம்) 15-59 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.

66 சதவிகிதம் பேர் ஆண்கள் என்பதும், 34 சதவிகிதம் பேர் பெண்கள்.

புலம்பெயர் தொழி லாளர்களில் 62 சதவீதம் பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்தவர்களே அதிகம்.

22 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள்.

மீதமுள்ள 16 சதவீதம் பேரே ஆய்வு நடத்தப்பட்ட குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  

இந்த காசநோயாளிகளில் 22 %பேருக்கு மருந்து எதிர்ப்பு காசநோய் (Drug-resistant TB) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சவால்கள் அதிகரிக்கும்.

மொத்த நோயாளிகளில் 25% பேர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள் என்றும், 27% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், 25% பேர் குடிநோயாளிகள் என்றும், 22.4% பேர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்றும் 8.8% பேருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளதும் தெரியவந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com