மின்வாரியப் பொறியாளராகச் சேர்ந்த ஒருவர் அரசின் தமிழ்த் தேர்வில் வெற்றிபெறக்கூட முடியாதபடி திறனில்லாமல் இருப்பதை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியுடன் விமர்சித்துள்ளது.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். 2018ஆம் ஆண்டில் இவர் மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகச் சேர்ந்தார். விதிப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் அரசின் தமிழ்த்திறன் தேர்வில் இவர் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், ஜெய்குமார் தோல்வியடைந்த நிலையில் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் முறையிட்டு மேலும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு பெற்றார். அதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அதையடுத்து அவரைப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது.
தன் பணிநீக்கத்தை எதிர்த்து ஜெய்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ஜெய்குமார் பச்சைத்தமிழன் என்பதால் அவருக்குப் பணியை வழங்க வேண்டும் என ஆணையிட்டார்.
ஆனால், இது பணி நியமன விதிகளுக்கு முரணானது எனக் கூறி மின்வாரியத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அமர்வு, ”தமிழ்நாட்டு அரசுப் பணியில் இருந்தால் தமிழில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இங்கு மட்டுமல்ல எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும் அந்த மொழியைத் தெரிந்திருக்க வேண்டும்.” எனக் கூறி, சுவாமிநாதனின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தனர்.
வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.