இலங்கை, அனுராதபுரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் தமிழ்ப் பெண் மருத்துவர் கத்திமுனையில் பாலின வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதைக் கண்டித்தும் அவருக்கு நீதிகோரியும் நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்களன்று இரவு தன் பணியை முடித்துவிட்டு தங்குமிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த மருத்துவரை ஒருவன் கத்திமுனையில் மிரட்டி தாக்கி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டான். அவன் முன்னாள் படையினன் எனத் தெரியவந்தது.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டாலும், நேற்று காலை 8 மணி முதல் இலங்கை அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிசா அனுராதபுரம் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், பணியாளர்களுடன் சமாதானப் பேச்சில் ஈடுபட்டார். ஆனாலும் நாளை காலை 8 மணிவரை தங்களின் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில், அனுராதபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள கல்னேவை பகுதியில் வைத்து குற்றவாளியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.