யானைகள் கணக்கெடுப்பு
யானைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் 2,961 யானைகள் தெரியுமா... 2023 கணக்கெடுப்பில் தகவல்!

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை 2ஆயிரத்து 961ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கேரளம், கர்நாடக அரசுகளின் வனத்துறை, டேராடூனில் உள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ஏ.என்.சி.கல்லூரி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை, நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாகக் காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு யானை சரகங்களில் 1,731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 99 பேர் பணியில் ஈடுபட்டனர். 3,496 சதுர கி.மீ பரப்பில் 690 வட்டாரங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதன் அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டில் 2,761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2,961 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் நீலகிரி கிழக்குத் தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2,477 யானைகளை கொண்டுள்ளது.

பொதுவாக, ஆண் யானைகளைவிட பெண் யானைகள் அதிகமாக (1:2.17 விகிதம்) உள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 1,105 யானைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,855 யானைகளும் உள்ளன.

இந்தக் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நேற்று வெளியிட்டார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகு, தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com