தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதியை
ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என்றும் மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
நேற்று 27.03.2025 அன்று நிதி மசோதா மீதான விவாதத்தில் அவர் பேசுகையில் இதை வலியுறுத்தினார்.
” பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டுகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் (MNREGA) திட்டத்திற்காக, தமிழக அரசுக்குஒன்றிய அரசு, ரூ.1100 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் பணியாற்றுகின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் பெண் கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது.
தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் வகையில், அந்த நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மாண்புமிகு நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாகுபாடு காட்டவோ, மறுக்கவோ கிடையாது. அவர்களுக்கு மேலுள்ள பிரதம அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர்கள்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வகையில் பாகுபாடு காட்டுகிறார்கள்.
இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவு திட்டத்தையும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது. இதற்கு மாண்புமிகு அமைச்சர் தயவுசெய்து ஒப்புதல் வழங்க வேண்டுகிறேன்.
15 ஆவது நிதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது, மேலும் 16 ஆவது நிதி ஆணையம் அரசியலமைப்பின் பிரிவு 280 இன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஏப்ரல் 1, 2026 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதைத் தீர்மானிப்பதற்கும், இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்குவதற்கான கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேவைகளைப் நிறைவேற்ற, ஒருங்கிணைந்த நிதியின் வளங்களை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் வரையறை செய்யும்.
அரவிந்த் பனாக்ரியா தலைமையிலான நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் நடத்தியுள்ளது.
மாநிலங்களுக்குரிய வரி வருவாய் பகிர்வின் அளவை குறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், அதை 50 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை நான் வலியுறுத்துகிறேன்.
மேலும், மாநில வரி வருவாய் இழப்பு மற்றும் செஸ் இழப்புக்கு, முன்னர் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடு போதுமானதாக இல்லை. அனைத்து நலத்திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பதாலும், ஏழை ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்குவதாலும், தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு மானியங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.” என்று வைகோ பேசினார்.