தர்மேந்திர பிரதானுக்கு ஒரே ஒரு கேள்வி - கி.வீரமணி சீற்றம்!

kveeramani
கி.வீரமணி
Published on

”இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழி அமுலில் உள்ளதா, பதில் கூறுங்கள் என ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார். 

இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் இதைக் கூறியுள்ளார்.    

” நாவடக்கமில்லாத ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, அவர்களது ’ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ ஆக தமிழ்நாட்டில் சிறிதும் கூச்சநாச்சமில்லாமல் தமிழ் மொழி – திராவிடப் பண்பாட்டை அழிக்கத் துணைபோகும் அடிவருடிகளுக்கும் நமது முக்கிய கேள்வி ஒன்று.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்ற முன்பு இல்லாத – அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையாக நிபந்தனை போடும் கல்வி அமைச்சரே,

மும்மொழித் திட்டத்தை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு பள்ளிகளில் கடைப்பிடிக்கிறார்கள்?

அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணைப்படி 22 மொழிகள் உள்ளனவே. அதில் உள்ள மொழிகள் அத்துணையில் ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்ற பம்மாத்துப் பதில் கூறுவோரே, அத்தனை மொழிகளின் ஆசிரியர் நியமனமாகி, தயாராக அந்தந்த மாநிலங்களில் உள்ளனரா?

பல மாநிலங்கள் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிகூட இல்லாமல், ஒரே மொழி தாய்மொழி என்ற பெயரால், ஹிந்தியை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் எதார்த்த நடைமுறையே உள்ளது என்பதை மறுக்க முடியுமா?

குறிப்பாக உ.பி., பீகார், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் எத்தனை மொழி பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். புள்ளிவிவரம் தர முடியுமா? அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு உண்டா? இல்லையா?“ என்று கி.வீரமணி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com