தலித்துகள் பொய்ப் புகார் தருவதாகச் சொல்வதா?- முதல்வர் கூட்டத்தில் திருமா அதிர்ச்சி!

தலித்துகள் பொய்ப் புகார் தருவதாகச் சொல்வதா?- முதல்வர் கூட்டத்தில் திருமா அதிர்ச்சி!
Published on

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற ‘மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

அப்போது, கீழ்காணும் கருத்துகளை வி.சி.க.வின் சார்பில் முன்வைத்ததாக அக்கட்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

”வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் தண்டனை பெற்றுத்தர வேண்டும்இங்கே எமக்கு வழங்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிகிறது. இதற்கு பிராசிகியூஷன் தரப்பே பொறுப்பேற்க வேண்டும்.

நேற்று (28.03.2025) விழுப்புரம் தனியுறு சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் 116 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட குடியிருப்பு தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சார்ந்த 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு மரக்காணம் ஆதிதிராவிட குடியிருப்பு தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஆதிதிராவிட குடியிருப்புகள் தாக்கப்படும் கலவர வழக்குகளிலும், கொலை வழக்குகளிலும் செசன்ஸ் நீதிமன்றத்திலோ சிறப்பு நீதிமன்றத்திலோ குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்பதை நிலையான ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலை முறையாக வழங்குகவன்கொடுமையால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஓய்வூதியம் வழங்கும்போது அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள அகவிலைப்படியைச் சேர்த்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அந்த ஓய்வூதியம் ஒரேசீரான விதத்தில் எல்லா மாவட்டங்களிலும் வழங்கப்படாத நிலை இருந்தது. தற்போதுதான் எல்லா மாவட்டங்களிலும் மாதம் 7500 ஓய்வூதியம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சட்டப்படி அவர்களுக்குக் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் G.O.Ms.No.351, Finance (Allowance) Department, dated 19.11.2024, உத்தரவின்படி 5000 ரூபாய் ஓய்வூதியத்தோடு 246% அகவிலைப்படி சேர்த்து வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதில் தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது ( W.P.(MD)No.4190 of 2025) . ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே விண்ணப்பித்து தமக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வன்கொடுமைச் சட்டப்படி ஓய்வூதியம் பெறுகிற அனைவருக்கும் சட்டப்படி 246% அகவிலைப்படியைச் சேர்த்து வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவது முழுமையான அளவில் நடைபெறவில்லை. பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 15 பேருக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது. அவ்வாறு வேலை வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* மாநில குற்ற ஆவண மைய ஆண்டு அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் : சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரப் பட்டியலில் இருப்பதால் தேசிய குற்ற ஆவண மைய ( என்சிஆர்பி) அறிக்கைகள் மாநில அரசுகள் கொடுக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையை வெளியிடாமல் உள்ளது. இது நலிவடைந்த பிரிவினரின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு மாநில குற்ற ஆவண மையத்தின் ( எஸ்சிஆர்பி) சார்பில் ஆண்டு தோறும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்

* மாநில எஸ் சி எஸ் டி ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட வேண்டும் : நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு தங்களது ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட வேண்டும். எஸ்சி எஸ்டி ஆணையத்தின் தற்போதைய தலைவர் பட்டியல் சமூக மக்கள் பொய்யாக வழக்கு தொடுக்கிறார்கள் என்று ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் செயல்பாட்டை முடக்குவதாக உள்ளது. எனவே அவர் அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

* போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் : பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து எஸ்சி எஸ்டி சமூக மாணவர்களின் உயர்கல்விக்காக வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தற்போதைய ஒன்றிய அரசு இந்த ஆண்டுக்கு ( 2025-26) மேல் நீட்டிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு தலையிட்டு இந்தத்திட்டத்தை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த ஸ்காலர்ஷிப்பை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதில் கடைபிடிக்கப்படும் தற்போதைய நடைமுறையால் ஏற்படும் தாமதம் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கிறது. எனவே மாணவர்கள் பாதிக்காதபடி ஸ்காலர்ஷிப்பை முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அம்பேத்கர் சிலைகள் நிறுவுவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும் : இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு மாநில அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு மட்டும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இந்த அணுகுமுறை அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக சுருக்கி அவமதிப்பதாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைகளை நிறுவுவதற்கு எளிமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

* நீதிபதி கே.சந்துரு அறிக்கையை செயல்படுத்துககல்விக் கூடங்களில் பாகுபாடுகளைக் களைவது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே.சந்துரு ஆணைய அறிக்கையை உடனே செயல்படுத்த வேண்டும்.” என்று  திருமாவளவன் கூறியுள்ளார். 

முன்னதாக, கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருமா, வேங்கைவயல் விவகாரத்தில் தங்கள் கட்சி சிபிஐ விசாரணையையே கோருவதாகத் தெரிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com