இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் இன்று திடீரென உயர்நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பு மோசடி வழக்கையொட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் தம்பி அசோக்குமார் உட்பட 13 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்துள்ளது. இதில் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு வெளியிலும் வந்துவிட்டார். ஆனால் அவரின் தம்பி இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகவே இருந்துவந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், இன்று கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்துநிற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அசோக்குமார் வருவாரா மாட்டாரா என கேள்விகள் இருந்தன. திடீரென வழக்குரைஞர் பரணிகுமாருடன் அசோக்குமார் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியும் வரவுள்ளநிலையில், அசோக்குமார் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்படுவாரா என அந்தப் பகுதி பரபரப்பாகியுள்ளது.
ஒருவேளை, அசோக்குமார் ஜாமின் மனு தாக்கல்செய்யவும் வாய்ப்பு உண்டு என அவரின் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.