சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

தாங்கள் வகித்த பதவியுடன்தான் நீதிமன்ற படியேறினார்கள் அத்வானியும் ஜோஷியும்! - சபாநாயகர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, ”தாங்கள் வகித்த பதவியுடன் தான் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் தேசத்துரோக வழக்கில் நீதிமன்ற படியேறினார்கள்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் முடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநருக்கு அமைச்சரின் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என்பதை நான்கு மணி நேரத்தில் தெரிந்து கொண்டார். ஆளுநருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்பதை சமீபத்தில் நீதிமன்றம் கூறியுள்ளது.

ராமர் கோயில் இடிப்பு வழக்கில் துணைப் பிரதமராக இருந்த அத்வானியும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியும் நீதிமன்ற படியேறினார்கள். வழக்கு, கைது, நீதிமன்ற விசாரணை இருந்தாலும் இதுவரை எந்த அமைச்சரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. இருந்தாலும் அமைச்சரை பதவி நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.

பதவி ஏற்று கொண்ட அமைச்சர்கள் தாங்களே தங்களின் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லலாம். அல்லது அமைச்சரை தன்னுடைய பதவியை விட்டு விலக முதலமைச்சர் அறிவுரை சொல்லலாம். இதுதவிர, வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது. அதை மீறிய அதிகாரம் உண்டென்றால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனைப் பெற்றவர்கள் தான் உடனடியாக நீக்கப்படுவார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அவரே பதவியிலிருந்து விலகினார். இப்படி பல உதாரணங்கள் உண்டு.

ஆளுநரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் பண்பானவர். ஆனால் உணர்ச்சிவசப்படக்கூடியவர். சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டு ஆளுநர் இத்தகைய அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் என்பார் பின்னர் தமிழ்நாடு என மாற்றி மீண்டும் அறிக்கை விடுவார்.

மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை அதிகாரத்திலிருந்து நீக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com