திருத்தணி மருத்துவமனைக்கான ரூ.45 கோடி எங்கே?- சீமான் கேள்வி

திருத்தணி மருத்துவமனைக்கான ரூ.45 கோடி எங்கே?- சீமான் கேள்வி
Published on

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது” என வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனையைத் திறந்து வைத்தார். ஆனால், அதன்பிறகும் கடந்த இரு மாதங்களாக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் திறக்கப்படவில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்த 45 கோடி என்னானது?” என சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளார். 

”தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். வெற்று விளம்பரத்திற்குத் தரம் உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கூடத் திமுக அரசு நிறைவு செய்யாதிருப்பது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடும் கொடுஞ்செயலாகும்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியோ, மருத்துவர்கள் நியமனமோ செய்யப்படாத காரணத்தால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு இயங்கி வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அதன்காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார மக்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குப் போகச்சொல்லி அலைகழிக்கப்படுவதும் அரங்கேறுகிறது. இதுகுறித்துப் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையாகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை என்பதால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில், தரம் உயர்த்தப்பட்ட மருத்துமனைகளும் அதைவிட மிக மோசமான நிலையிலிருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். இத்தனை மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு 'இந்தியா வியக்கும் திராவிட மாடல், உலகம் வியக்கும் நான்காண்டு சாதனை' என்று திமுக அரசு பேசுவது வெட்கக்கேடானது.

ஆகவே, தமிழ்நாடு அரசு, தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து மக்கள் பயன்பாட்டிற்காக விரைந்து இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையைப்போக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்க உடனடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும்.” என்றும் சீமானின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com