திருத்தணியில் நேற்று அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். அதன் பின்னணியில் உள்ள இன்னொரு துயரத்தைமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
"திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி. கண்டிகையில் நேற்று (07.03.2025) லாரி - அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததும், பெண்கள், குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அம்மையார்குப்பம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லாததால் தங்களது குடும்ப வறுமை காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 35 நெசவுத் தொழிலாளர்கள் சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் உணவு சப்ளையர் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்த போது இந்த கோரவிபத்து நடந்துள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் தடுப்பு வேலிகள் மற்றும் பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாததன் விளைவே இந்த கோர விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயம் ஏற்பட்டவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி செய்துள்ளார்.
இருப்பினும், இறந்த நெசவுத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தர வேலைவாய்ப்பின்றி தினசரி கூலி வேலை செய்பவர்கள் என்பதால் அவர்களின் எதிர்கால குடும்பத்தின் நலனை கருதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும் - அரசு வேலையும், வீடில்லாதவர்களுக்கு அரசு வீடும், குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிப்பதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அம்மையார் குப்பத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நெசவு உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை விரைந்து ஏற்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது." என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.