அதிகரிக்கும் ஆடு திருட்டு - விவசாயிகள் குமுறல்!

அதிகரிக்கும் ஆடு திருட்டு - விவசாயிகள் குமுறல்!
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் சில மாதங்களாக விவசாயிகள் வளர்த்துவரும் ஆடுகள் அடிக்கடி திருடுபோவது தொடர்கதையாகிவிட்டது. இதுகுறித்து வந்தவாசியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளிடம் தங்கள் முறையீட்டைத் தெரிவித்தனர்.

”வந்தவாசி வட்டாரம் ஏம்பலம், அதியனூர், பாதூர் என வந்தவாசி வட்டாரத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. திருடர்கள் பிடிபட்டாலும் ஆடுகள் பறிமுதல் செய்யப்படுவதில்லை. ஆடுகளை பறிமுதல் செய்து புகாரளித்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் இல்லையேல் தக்க நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று அவர்கள் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். 

” விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் ஏற்பாடுகளை வேளாண் அதிகாரிகள் விரிவுபடுத்தி விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும்.

பழங்குடியின மக்கள் தமக்கு வழங்கப்படும் தொகுப்பு வீடுகளை தாமே கட்டிக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் புன்னை, ஏம்பலம், கீழ்வில்லிவலம், பாஞ்சரை முதலிய பல கிராம பழங்குடியினரின் தொகுப்பு வீடுகளுக்கான தொகையை உடனடியாக விடுவித்து சிமெண்ட், கம்பிகளையும் விரைந்து வழங்க வேண்டும். பாஞ்சரை பழங்குடியினருக்கு தகுந்த இடுகாட்டிற்கான இடத்தினை விரைந்து ஏற்பாடு செய்யவேண்டும்.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஜா.வே. சிவராமன் தலைமையில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  

இந்தக் கோரிக்கைகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைசார் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com