தெய்வீகப் பயணம் மேற்கொள்வோருக்கு மருத்துவ சேவை மேற்கொண்டால் இந்த மாவட்ட இருப்பிடச்சேவைத் திட்டச் சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளதற்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், செயலாளர் டாக்டர் சாந்தி ஆகியோர் பேசியது:
”முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பு காலத்தின் பொழுது 3 மாதங்கள் மாவட்ட சுகாதார இயக்கத்தின் கீழ் கட்டாயமாக பணியாற்ற (District Residential Programme) வேண்டும் என்ற திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பையும் மாநில உரிமையையும் பறித்து வருகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக் காலத்தில் தங்களுடைய துறைசார்ந்த பயிற்சியை முறையாக மேற்கொள்வதற்கு இத்திட்டம் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. இது மாணவர்களின் கல்வி, பயிற்சித் தரத்தை பாதிக்கிறது.
எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் இந்து மத புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சேவை செய்தால், அது இத்திட்டத்தின் கீழ் சேவைசெய்ததாக சான்றிதழ் வழங்கப்படும் .
அதாவது, யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதர்நாத், பத்திரிநாத் போன்ற நான்கு இடங்களுக்கு (Char Dham Yatra ) ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோருக்கு மருத்துவ சேவை மேற்கொண்டால் இந்த டி.ஆர்.பி ( District Residential Programme) சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
ஒன்றிய அரசு என்.எம்.சி சட்டம் 2019 யை இயற்றி நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, டிஆர்பி போன்றவை மூலமாக மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமின்றி, இந்துத்துவா கருத்தியலை மருத்துவக் கல்வியில் திணிக்கத் திட்டமிடுகிறது என்ற எங்களது நீண்ட காலக் குற்றச்சாட்டு உறுதியாகி வருகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்துத்துவா அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக மாறியுள்ளது.
சரகர் உறுதிமொழித் திணிப்பு, தடுப்பூசித் திட்டத்திற்கு ’இந்திர தனுஷ் திட்டம்’ எனப் பெயர்மாற்றம் செய்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயரை ’ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என மாற்றம் செய்தது போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் தெய்வீகப் பயணத்திற்கு மட்டும் இவ்வாறு முதுநிலை மருத்துவ மாணவர்களின் சேவையைக் கட்டாயப்படுத்துவது என்பது நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் , அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உடட்ட வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும்.
ஆனால் இப்பணியில் மதவாத நோக்கோடு தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுவது சரியல்ல.
முதுநிலை மருத்துவ மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்துவது சரியல்ல. இது இளம் மருத்துவர்களை மதரீதியாக பிளவு படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
தெய்வீகப் பயணம் மேற்கொள்வோருக்கு உதவிட இலவச மருத்துவ முகாம்களை அரசே உருவாக்கவேண்டும். இப்பணிக்கென மருத்துவர்களைத் தனியாக நியமிக்க வேண்டும். எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டி.ஆர்.பி. திட்டத்தையே முழுமையாக ரத்து செய்திட வேண்டும்.” என்று டாக்டர்கள் இரவீந்திரநாத், சாந்தி ஆகியோர் கூறினார்.
பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ். தனவந்தன், தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வே.காசிநாத பாரதி, பாசிட்டிவ் விமன் நெட் வொர்க் அகில இந்தியத் தலைவர் பி.கௌசல்யா, நிர்வாகிகள் எஸ்.சத்தியா, எஸ்.சரஸ்வதி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.ஆர். தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.