தெலங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 23 வயது இளைஞரை ஆணவக்கொலை செய்த வழக்கில், முக்கியமான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நளகொண்டா மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மீதமுள்ள ஆறு குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைவாசத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நளகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரணாய் குமார், 23 வயதில் சக வயது பால்ய தோழி அம்ருத வர்சினியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணத்தைத் தடுக்க அம்ருத வர்சினியின் தந்தையும் மாமாவும் பிரணாயிடம் பேரம் பேசினர்.
காதல் ஜோடியிடம் கடுமையாக நடந்துகொண்ட அவர்கள், 2018 செப்டம்பர் 14ஆம் தேதியன்று பிரணாயும் அவருடைய தாயாரும் அம்ருத வர்சினிக்கு ஏற்பட்ட முதுகுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது வர்சினியின் தந்தை மாருதிராவ் அமர்த்திய கூலிப்படையைச் சேர்ந்தவன் பிரணாயை பட்டப்பகலில் தாய், மனைவி முன்னாலேயே வெட்டிக்கொன்றான்.
தெலங்கானா, ஆந்திரம் இரு மாநிலங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தக் கொடூரத்தில் நீதி கிடைக்கவேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் குரல்கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து இராம்கோபால்வர்மா மர்டர் என ஒரு திரைப்படத்தையே உருவாக்கினார்.
இந்த ஆணவக்கொலை தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது 2020ஆம் ஆண்டில் மார்ச் 8ஆம் தேதியன்று அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் வழக்கறிஞரைப் பார்க்கப்போனபோது தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் சென்ற அம்ருதாவை அவரின் உறவினர்கள் தாக்க முற்பட்டு துரத்தியடித்தனர். ஆனால் காவல் துறை பாதுகாப்பு இருந்ததால் அவர் இறுதி நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார்.
தன் சொந்த ஊருக்கே திரும்பப்போவதில்லை என்றும் அவர் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
பிரணாயின் பெற்றோருடன் வசித்துவந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில், முக்கியமான குற்றவாளி சுபாஷ் சர்மா என்பவனுக்கு மரணதண்டனை விதித்து, நளகொண்டா வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.