காதல் படத்தில் நடித்த சுகுமார் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட மூன்று சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை, மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் இந்த வழக்கைப் பதிந்துள்ளனர்.
ஏற்கெனவே திருமணம் ஆன இவர், அதை மறைத்து, துணைநடிகை ஒருவரிடம் பழகியுள்ளார். இருவரும் மூன்று வருடங்களுக்கும் மேல் சேர்ந்துவாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த நடிகையிடம் 7 இலட்சம் ரூபாய்வரை நகை, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதை மாம்பலம் காவல்நிலையத்தினர் விசாரித்தபோது, அந்தத் தொகைக்கான காசோலையை சுகுமார் கொடுத்ததாகவும் அந்தக் காசோலை செல்லாததாகிவிட்டது என்றும் காவல்துறை வட்டாரங்களும் தெரிவித்தன.
மேலும், அந்தக் காசோலைகளைத் திருப்பித்தரும்படியும் அவரை மிரட்டியதாகவும் சுகுமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக அவர் மீது உரிய சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.