ஆடுகளைக் கடித்துக் குதறும் நாய்கள் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்குமாறு போராடும் விவசாயிகளை காவல்துறை அடக்குவதாக பா.ஜ.க. விவசாயிகள் அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
பா.ஜ.க. மாநில விவசாயிகள் அணியின் தலைவர் நாகராஜ் இதைக் கூறியுள்ளார்.
”திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஓராண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நாய்கள் கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,100 கோடி கருத்தடைக்குக் கணக்கு காட்டப்பட்டாலும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
ஓராண்டு காலமாக போராடும் விவசாயிகளுக்கு இதோ இழப்பீடு தருகிறோம் என்று ஏமாற்றி வருகிறது தமிழக அரசு.
நேற்றும் இன்றும் காங்கேயம், சென்னிமலையில் 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்களால் குதறிக் கொல்லப்பட, நிவாரணம் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் கண்மூடித்தனமாய் தாக்கியிருக்கிறது காவல்துறை.
விவசாயமும் பொய்த்துவிட்ட நிலையில் ஆடு வளர்ப்பதையே வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் போராட்டத்தில் கடுமை காட்டி, அவர்களை கைதும் செய்திருக்கிறது காவல்துறை. காவல்துறையின் செயல் கண்டனத்துக்குரியது.
அடுத்த கட்டமாக மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கவில்லையென்றால் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.” என்று நாகராஜ் கூறியுள்ளார்.