நீட்தொடர்பான சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தை அ.தி.மு.க.தன் எஜமான விசுவாசத்தால் புறக்கணித்துவிட்டது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தன் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியதான கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில், தானும்தன் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகச் செயல்பட்டுவருவதை கி.வீரமணி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போன்றவர்கள் பாராட்டியதைப் பெருமிதமாக விவரித்துள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். சமூகநீதிக்கும் – மாணவர்களுக்கும் - மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.