திருநெல்வேலி மாவட்டத்தில் மைய அரசு அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் திடீரென இந்தியில் பெயரைச் சேர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று மொழிக் கொள்கையைச் செயல்படுத்த உள்ளதாக மைய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தோன்றியுள்ளது.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றன.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகதுக்கு அருகே, மாவட்ட அறிவியல் மையம் எனும் பெயரில் - மைய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் அறிவியல் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது. அதில் நீண்ட காலமாக ஆங்கிலம், தமிழில் மட்டுமே பெயர்ப்பலகை இருந்துவந்த நிலையில், திடீரென மூன்றாவதாக இந்தியிலும் சேர்த்து பெயரை எழுதி இன்று வைத்திருக்கின்றனர்.
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் பெயர்ப்பலகை சீரமைக்கப்பட்டது என்று அந்தத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மைய அரசு வேண்டுமென்றே இந்தியைப் புகுத்துவதாக உள்ளூர் தமிழ் அமைப்பினர் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.