செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாபில் பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருபது பேர், ஜலாலாபாத் நகரில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்பதற்காக, இன்று காலை ஒரு வேனில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் உள்ள கொல்காமவர் கிராம் அருகே காலை 7.45 மணியளவில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது அந்த வேன் பயங்கர வேகத்துடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் முதலில் வந்து மீட்டு உதவி செய்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.