பட்ஜெட்டைப் பாராட்டிய தலைவர்கள் சொன்னது என்ன?

பட்ஜெட்டைப் பாராட்டிய தலைவர்கள் சொன்னது என்ன?
Published on

ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக சாதகமான தலைவர்களையும் சில மனக்குறைகளையும் வெளியிட்டுள்ளனர்.

பன்முக வளர்ச்சி- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

“சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்துள்ள 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ’எல்லோருக்கும் எல்லாம்’ எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

ஒன்றிய அரசின் தடைகளை மீறி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி, 2022-2023ஆம் ஆண்டில் 7.61 சதவீதம், 2023-2024இல் 9.19 சதவீதம், 2024-2025இல் 6.48 சதவீதம் என்று இருக்கும் நிலையில், தமிழ்நாடு 2021-2022ஆம் ஆண்டில் இருந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருவதாக பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், 2024-2025 நிதியாண்டிலும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வரவு செலவு திட்டத்தில் வழிமுறைகள் காணப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.

தமிழ்நாடு, 2023-2024ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய மதிப்பில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகமாக இருப்பதுடன், தனிநபர் வருமானத்தில் தமிழகம் இந்திய மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

உற்பத்தித் துறையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் ஆகும்.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

மொத்தம், 35.56 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுடன் தமிழகம் 2023-2024ஆம் ஆண்டில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியால் ‘இந்தியாவின் டெட்ராய்ட்' என்று தமிழகம் அழைக்கப்படுவதாகவும் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சிறந்த நிர்வாகத் திறனைக் காட்டுகின்றன.

சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6,100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும்,

ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.

* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.

போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள். மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியன .

மகளிர் நலனுக்கு முக்கியத்துவம் தந்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.

இவையெல்லாம் தொழில் துறையில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடைய வழி வகுக்கும்.

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளது சமூக நலனில் அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

கல்வித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நம்பிக்கை அளிக்கிறது.

மொத்தத்தில் நிதியமைச்சர் குறிப்பிட்டு இருப்பதைப் போல பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறவும், மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோட நிதிநிலை அறிக்கை பாதை அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:

” தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,329 கிராமங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6,100 கி.மீ. கிராம சாலைகளை மேம்படுத்த ரூபாய் 2,200 கோடி. அதேபோல மகளிர் உரிமைத் திட்டம் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் ரூபாய் 1000 மாதந்தோறும் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்திட்டத்திற்கு ரூபாய் 13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விப் படிப்பில் சேரும் வாய்ப்பை அதிகப்படுத்த புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். இதனால் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் 4.76 இலட்சம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10,000 புதிய குழுக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூபாய் 37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது.

அதேபோல, மகளிர் விடியல் பயணத்திற்கு ரூபாய் 3600 கோடி, காலை உணவு திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் 17 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் 3.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கான வருகை அதிகரித்திருக்கிறது. இதற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மதிய உணவு திட்டத்தினால் மாணவர் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கடைபிடிக்காத காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் செய்திருக்கிறார்.

மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூபாய் 2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது.

அதேபோல, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி, வாழ்வாதாரத்தை உருவாக்கிடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 3796 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதியை வழங்க மறுப்பதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு முடக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதையும் மீறி தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை சொந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்களுக்காக ரூபாய் 10 கோடி செலவில் அன்புச்சோலை மையங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 7000 வீதம் 10 மாத காலத்திற்கு வழங்க நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் அகில இந்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு கல்லூரிகளில் 15000 இடங்கள் கூடுதலாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்பட இருக்கிறது. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் வெளியிடும் திட்டத்திற்காக ரூபாய் 133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 3500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இரண்டு ஆண்டுகளில் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முறையாக நிதியை ஒதுக்கியிருக்கிற நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை பாராட்டுகிறேன். ”

சில எதிர்பார்ப்புகளும் தொடர்கிறது- முத்தரசன்

” கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை விரிவு படுத்தி, பரவலாக்குவதில் நிதி நிலை அறிக்கை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி வசதிக்காக 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் தொன்மை மரபையும், இணையற்ற நாகரிக வாழ்வையும் எடுத்துக் கூறும் தொல்லியல் ஆய்வுகளுக்கும், அருங்காட்சியகங்கள் அமைக்கவும் முன்னுரிமை வழங்கியுள்ளது.

பிறநாட்டு நல்லறிஞர்கள் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை” ருசிக்க தலைசிறந்த தமிழ் நூல்கள் பிறநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் திறமையான புலமைக்கு வெளிநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்ற மகாகவியின் கனவு நனவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டம் பெண்களை அதிகாரப்படுத்தும் திசையில் புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தேர்வுசெய்வது, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தி மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அதிக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டதில் நிதிநிலை அறிக்கை பெருமிதம் கொள்கிறது.

கொரோனா காலத்தில் இருந்த நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு பணப் பலன் திட்டத்தை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் பெறலாம் என அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு களத்தில் நுழைந்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, தனது கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் நிலையிலும் இரு மொழிக் கொள்கையில் உறுதிகாட்டிவருவதும், வருவாய் பற்றாக்குறையைக் குறைத்திருப்பதும் பாராட்டி வரவேற்றதக்கது.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை, தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில், ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

தனி நபர் வருமானம் உயர்ந்து வரும் தமிழ்நாட்டில் சொற்பத்தொகை தொகுப்பூதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதை நிதி நிலை அறிக்கை காணத் தவறியது வருத்தம் அளிக்கிறது. நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர் ஊதியபாக்கி உட்பட ரூ.3 ஆயிரத்து 896 கோடி நிதி வழங்க மறுத்துவருவதை கடுமையான குரலில் கண்டித்திருக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக்கட்டணத்தை இரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி வருவதையும் நிதி நிலை அறிக்கை கருத்தில்கொண்டிருக்க வேண்டும். 2025- 26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது.”

போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரும் சோர்வு - பெ.சண்முகம்

” தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கெனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது, மாணவர்களுக்கான காலை நேர உணவு திட்டம் நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி கூடுதலான நிதி ஒதுக்கீடு,கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, மாநகராட்சிகளில் 30 இடங்களில் முதல்வர் படிப்பகம் ஆகிய அம்சங்கள் வரவேற்கத்தக்கநடவடிக்கைகளாகும்.

நடப்பு நிதியாண்டில் ஐந்து லட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். அதேபோல, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு பதினெட்டு வயது எட்டும் வரை மாதம் ரூ.2,000/-வழங்கப்படுவது, ஆதரவற்ற முதியோருக்கு ’அன்பு சோலை’ எனும்பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படுவது, வளரிளம் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் தடுப்பிற்கான தடுப்பு மருந்து திட்டம் ஆகியவையும் நல்ல முன்முயற்சிகளாகும். அரசு ஊழியர் -ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்; அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது, புதிய நூலகங்கள், வெளிமாநிலங்கள் -வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஆகியவையும் வரவேற்கத்த நடவடிக்கைகளாகும்.

தமிழ்நாடு அரசின் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்த அறிவிப்போ, அதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லாமல் உள்ளது. குறிப்பாக பன்னிரெண்டு லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நாற்பதாயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும் அறிவிப்பு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது அந்த பகுதியினரிடையே பெரும் சோர்வை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அரசிடமும் நேரடியாக முறையிட்டுள்ளனர். இருந்தும்கூட, உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது மாற்றுத்திறனாளிகளிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதோடு, நிதிநிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்குரிய நிதி ஒதுக்கீடு, மானியங்கள் வழங்குவதில் பாரபட்சம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 3,796 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குத் தராமல் நிலுவை வைத்திருப்பது போன்ற செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய நிதியைப் பெற தொடர்ந்து முயன்றுவரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கவேண்டும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com