பண்ணைக்குட்டையில் மூழ்கிய மாணவன், காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் பலி!

பண்ணைக்குட்டையில் மூழ்கிய மாணவன், காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் பலி!
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பண்ணைக் குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவனும், அவனைக் காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மணிகண்டன் என்பவரின் மகன் நித்தின் (வயது 8) மூன்றாம் வகுப்பு படித்துவந்தான்.

இன்று (5.03.2025) மதியம் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் சிறுவன் தவறி விழுந்துவிட்டான். தண்ணீருக்குள் அவன் மூழ்கிவிட்டான் என்பதை சக மாணவர்கள் சொல்ல, பள்ளியின் தலைமையாசிரியர் கௌரிசங்கர் (வயது 53), மாணவனைக் காப்பாற்ற முயன்றார்.

ஆனால், சிறுவனையும் காப்பாற்ற முடியாமல் அவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தால் அந்த வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ”செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com