பரங்கிப்பேட்டையில் மொழிப்போர்த் தியாகி இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம்- திருமா

திருமாவளவன்
திருமாவளவன்
Published on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் இராசேந்திரனை அடக்கம்செய்த பரங்கிப்பேட்டையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில், மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். 

”1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதுசெய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார். அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார்.” 

”நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் “ விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.”என விவரித்துள்ள அவர்,

”இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பின்படி இருவருக்கும் சிலை அமைத்து சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது. அண்ணா அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

”1965ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார். அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டும். அவர் அடக்கம்செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டும்.” என்றும் திருமாவளவன் வலியுறுத்திக் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com