பருவநிலை தப்புதல் விழிப்பூட்ட ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வி இயக்கம்!

சூரியன் இயக்கம்
சூரியன் இயக்கம்
Published on

பருவநிலை தப்பிவரும் உலக சூழலைப் பள்ளி மாணவர்களுக்கும் உணர்த்தும் நோக்கத்தில் காலநிலைக் கல்வி இயக்கம் கொண்டுவரப்படுகிறது. 

காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்துதல், பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் “மாநில அளவிலான பல்வேறு போட்டிகள்  போன்றவை நடத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என காலநிலைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 

அவரின் மற்ற அறிவிப்புகள்:

கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க உயிர்க்கேடயங்கள் அமைத்தல்

தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையையும், பன்முகத்தன்மை கொண்ட கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கொண்டுள்ள ஒரு மாநிலமாகும். அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் கடற்கரைச் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்த்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வதோடல்லாமல் இப்பிரச்சனைகளுக்கான, நிலையான தீர்வுகளின் தேவையையும் அதிகரிக்கிறது.

எனவே,  இச்சூழலின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் உயிர்க் கேடயங்களை உருவாக்கி, கரையோர வாழ்விடத்தை மறுசீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் தூத்துக்குடியில் ரூ. 10.00 கோடி மதிப்பீட்டில் உயிர்க் கேடயங்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக நாட்டு மரங்கள், அலையாத்தி மரங்கள் போன்றவை நடவு செய்யப்பட்டு கடலோர மீள்தன்மையை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும், கரிமத் தேக்கத்திற்கு பங்களிக்கவும் மற்றும் ஒரு நிலையான கடலோர இடையகத்தை  உருவாக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இராஜபாளையம் - சஞ்சீவி மலை மறுசீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பு

நாட்டிலேயே நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. எனினும், நகரமயமாக்கலினால் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வுகள், காற்று மாசுபாடு மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்பு என பல்வேறு பிரச்சனைகள் சுற்றுச்சூழல் மீது தீவிரமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே இது போன்ற பிரச்சனைகளை சீர் செய்யவும் கரிமத் தேக்கத்தினை அதிகப்படுத்தவும், தமிழ்நாடு அரசு, இராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையினை ரூ 5.00 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துக் காடுகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சீமைக் கருவேல மரங்களை அகற்றி, நாட்டு ரக மரங்களை நடுவதன் மூலம் சஞ்சீவி மலையினை மறுசீரமைத்து, உள்ளூர் சமூகங்கள், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பயன்பெறும் விதமாக மேய்ச்ச்சல் மேலாண்மை உத்திகள் மூலம் அம்மலை பாதுகாக்கப்படும்.  .

இத்திட்டமானது, இராஜபாளையம் நகரம் கரிம சமநிலையை எட்டவும் தமிழ்நாட்டின் கரிம சமநிலை இலட்சியத்திற்கான சான்றாகவும் திகழும்.

இராஜபாளையம் நகரில் காலநிலை மீள்திறனை மேம்படுத்த ஏரிகள் மறுசீரமைப்பு

இராஜபாளையம் நகரின் நிலைத்தன்மைக்கும், நீர்ப் பாசானத்திற்கும், நிலத்தடி நீர் உயர்வு மற்றும் பல்லுயிர்த்தன்மைக்கும் ஆதாரமாகத் திகழ்வது இங்குள்ள ஏரிகளும் அவற்றினிடையே உள்ள இணைப்புகளுமாகும். எனினும் , அதிகரித்துவரும் நகரமயமாக்கல், மாசு மற்றும் அந்நிய தாவர பரவல் போன்ற பிரச்சினைகள் இந்த நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

எனவே, இச்சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, தமிழ்நாடு அரசு – கொத்தன்குளம், கருங்குளம், கொண்டனேரி கண்மாய், அலத்தன்குளம், கம்மாபட்டி கண்மாய், பெரியாத்திக்குளம் மற்றும் இந்நீர்நிலைகளை இணைக்கும் 20 ஓடைகள் ஆகியவற்றை ரூ. 16.00 கோடி மதிப்பீட்டில் நீடித்த மற்றும் நிலைத்த முறையில் மறுசீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையாக அந்நிய தாவரங்களான ஆகாயத்தாமரை மற்றும் நெய்வேலிக் காட்டாமணக்கு ஆகியவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும், நீர் தாங்கலை அதிகரிக்கவும் மேற்கூறிய நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

கைவிடப்பட்ட சுரங்கங்களை மீட்டெடுத்தல்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீர்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீர்நிலைகள் மற்றும் சிதைவுற்ற சூழல் அமைப்புகள் ஆகியன, சுற்றுச்சூழலைச் சீரமைக்க வேண்டிய நம் பொறுப்புணர்வினை தொடர்ச்சியாக நினைவூட்டி வருகின்றன. இச்சவால்களை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு, கைவிடப்பட்ட சுரங்கங்கள், குறிப்பாக மதுக்கரையில் உள்ள சுரங்கங்களை நிலையான, உற்பத்தித் திறன் மற்றும் உயிர்ப் பன்மய மேம்பாட்டிற்கு உகந்த வகையிலான நிலப்பரப்பாக மாற்றும் வண்ணம் இச்சூழல் அமைப்புகளை  மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

            இத்திட்டமானது, உயிர்ப்பன்மய மேம்பாடு, நிலத்தடி நீர் அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.  இதுபோன்ற சிதைவுற்ற நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் சூழல்-சுற்றுலா, வேளாண் காடுவளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்ற உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் 4.0

            காலநிலை மாற்றம் என்பது இப்போது தவிர்க்க இயலாத பிரச்சனை என்பதனை இளைய தலைமுறையினர் உணர்ந்து, அதன் விளைவுகளை ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, இப்பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளில் சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு மூலம் மின் விளக்குகள், பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், உர உற்பத்தி, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி இல்லா சூழல் உருவாக்கப்படும்.

            மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த பசுமைப் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கெதிரான  தழுவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிகளில் பசுமை உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

            மேலும்  100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ 20.00 கோடி மதிப்பீட்டில்  இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சுற்றுச்சூழல் விருதுகளுக்கான ரொக்கப் பரிசினை அதிகரித்தல்

            சுற்றுச்சூழல் விருதுகள் ஆண்டுதோறும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்க கடந்த 2000-ம் ஆண்டு முதல் அறிஞர் அண்ணா விருது, சுற்றுசூழல் சுடரொளி விருது, சுற்றுசூழல் செயல் வீரர் விருது (சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி), டாக்டர். குருசாமி முதலியார் விருது, சுற்றுச்சூழல் காவலர் விருது (சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள்), கர்மவீரர் காமராசர் விருது, சுற்றுச்சூழல் புரவலர் விருது ( சுற்றுச்சூழல் மேலாண்மை விருதுகள்) மற்றும் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் 10 விருதுகள் வழங்கப்படுகின்றன.

            மேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிசுத் தொகையானது கீழ்க்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படும்:

·       முதல் பரிசு ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆகவும்

·       இரண்டாம் பரிசு ரூ.15,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும்

·       மூன்றாம் பரிசு ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/- ஆகவும் உயர்த்தப்படுகிறது.

            எனவே, இவ்விருதுகளை வழங்க ரூ. 4.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடலின் நிலைத்தன்மை பாதுகாக்க மீன்வலை சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திட்டம்

தமிழ்நாட்டின் கடலோரங்களில், கடலில் கைவிடப்பட்ட மீன்வலைகள் மற்றும் நெகிழி கழிவுகளால், கடல் உயிர்வளங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், கடல்சார் நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்ளும் முன்முயற்சியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக, “தமிழ்நாடு மீன்வலை முயற்சிகள்” (TNFI) என்ற முன்னோடித் திட்டம், 2024 ஆகஸ்ட் 14-ஆம் தேதி காசிமேட்டில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி, கடலில் கைவிடப்படும் மீன்வலைகளை மீனவர்களின் பங்கேற்புடன் சேகரித்து அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதுவரை, மீனவர்களிடமிருந்து 13,510 கிலோ மீன்வலை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பயனுள்ள பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன.

இத்திட்டம் மாநிலத்தின் அனைத்து 14 கடலோர மாவட்டங்களிலும் ரூ.1.75 கோடியில் உலக வங்கியின் “TN‑SHORE” நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.

தமிழக ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் நெகிழி மாசுபாட்டை ஒழிக்கும் முன்னோடி திட்டம் – TN TAPER

நிலத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருங்கடல்களுக்கு கொண்டு செல்வதில் ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் ஆறுகள் மற்றும் முகத்துவாரங்கள் நெகிழி மாசுபாட்டால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.

அவற்றை சீரமைக்க, உலக வங்கி திட்டத்தின் கீழ் (TN-SHORE) முதன்முறையாக, சென்னையிலுள்ள ஒரு ஆற்றங்கரையில், இடைமறிப்பான்களைப் பயன்படுத்தி, முறையான கழிவு மீட்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் 2025-26 ஆம் ஆண்டில் ரூ.4.00 கோடி செலவில் ஒரு முன்னோடி திட்டமாக மேற்கொள்ளப்படும்,

கடலோர மாவட்டங்களில் நெகிழி ஒழிப்பிற்கான மீட்பு மையங்கள்

நில மார்க்கமாக உருவாகும் பெரும்பாலான நெகிழிகள் (70 முதல் 80 சதவீதம் வரை) பெருங்கடல்களைச் சென்றடைகின்றன.  கூடுதலாக 20 முதல் 30 சதவீத நெகிழி கழிவுகள், மீன்பிடித்தல் மற்றும் பிற கடல் சார்ந்த செயல்களிலிருந்து உருவாகிறது.

இச்சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, உலக வங்கியின் TN-SHORE திட்டத்தின் கீழ், கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளை தடுக்கும் வகையில், சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய முக்கிய கடலோர மாவட்டங்களில் ரூ.1.00 கோடி மதிப்பில் வள மீட்பு மையங்கள் (Material Recovery Facilities) அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு காலநிலை திறன்மிகு சந்தைகள் திட்டம்

2050-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு இலக்கை அடைய, ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு காய்கறி, பழ, மற்றும் பூ வணிக வளாக சந்தையினை கார்பன் நிகர பூஜ்ய சந்தையை உருவாக்க (Carbon Neutral Koyambedu Market), சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின்படி கோயம்பேடு சந்தையில் உள்ள கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வசதி, மழைநீர் மற்றும் வடிகால் மேலாண்மை, கட்டிட மேலாண்மை, ஆற்றல் பயன்பாடு மற்றும் கார்பன் அடர்த்தி கணிப்பு, போக்குவரத்து நெரிசல் பராமரிப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இத்திட்டத்தின் வெற்றிகரமான ஆய்வை தொடர்ந்து, இம்மாதிரியான நிகர பூஜ்ய முன்னெடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆய்வுகள், மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளிலும் ரூ.1.50 கோடி செலவில்  மேற்கொள்ளப்படும்.

அதிநவீன நடமாடும் ஆய்வகங்கள் மூலம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 14.08.2024 அன்று இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், எரிவாயு கசிவு, எண்ணெய் கசிவு, தீ மற்றும் நீர் நிலைகளில் நுரை பொங்குதல் போன்ற பேரிடர்களுக்கு உடனடியாக செயல்படும் வகையில், சென்னை மண்டலத்தில் நிகழ்நேரத்தில் காற்று, நீர் மற்றும் ஒலியின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க, நவீன பகுப்பாய்வு கருவிகளுடன் ஒரு நடமாடும் கண்காணிப்பு வாகனத்தைப் பயன்படுத்தும் முன்முயற்சி ரூ.1 கோடி செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மேற்கொள்ளப்படும்.

இந்த முயற்சியானது, நிகழ்நேரத் தரவை வழங்குவதுடன், நமது சுற்றுச்சூழலைக் கண்காணித்து பேரிடரின் போது தயார்நிலையில் இருக்கவும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

சாலைவழி வாகனங்களின் உமிழ்வு வெளியீட்டை தொலைவிலிருந்து கண்காணிக்கும் திட்டம்

சாலைகளில் இயங்கும் மோட்டார் வாகனங்கள், காற்று மாசுபாடு மற்றும் பசுமை குடில் வாயுக்கள் உமிழ்விற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது, காற்றின் தரத்தையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக சுங்கச் சாவடிகளில், போக்குவரத்து நெரிசல், இடைநிறுத்தம் மற்றும் வேக மாறுபாடுகள் காரணமாக அதிக அளவிலான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

சாலைவழி வாகனங்களின் உமிழ்வை மேம்பட்ட முறையில் கண்காணிக்கவும், உமிழ்வு போக்கு குறித்து தெளிவான புரிதலை உருவாக்கவும், 2025–26ம் ஆண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முன்னோட்ட அடிப்படையில் வாகன உமிழ்வைத் தொலைவிலிருந்து கண்காணிக்கும் முறையை ரூ.15 இலட்சம் செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து செயல்படுத்த முன்மொழிகிறது.

துரித நடவடிக்கைகளுக்காகப் பறக்கும் படைகள் விரிவாக்கம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பறக்கும் படைகள் மாசு கட்டுப்பாட்டைத் தடுக்கும் பணியில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை சுற்றுச்சூழலை கண்காணிக்கவும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைபடுத்தி ஒழுங்குபடுத்தவும் ஒரு விரைவு படையாக செயல்படுகின்றன. திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, தினசரி அறிக்கைகளைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்படுகின்றன.

எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு திறம்படவும், உடனடியாகவும் செயல்படுவதற்கு மதுரை, திருச்சி, கடலூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து இடங்களில் ரூ.2.35 கோடி செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ‘பறக்கும் படைகள்’  நிறுவப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com