சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு, வேறு துறைகள் கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு அனுமதிக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.
பதினெட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்:
”1. சென்னை இராணி மேரி பெண்கள் கல்லூரி வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முயன்ற போது கல்லூரி மாணவிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து போராடினர். இராணி மேரி கல்லூரி காப்பாற்றப்பட்டது.
2. கல்வியில் தமிழ்நாடு என்றுமே சிறந்து விளங்குவதற்கு அடிப்படை காரணம்; நிலம் ஒதுக்கி, பணம் ஒதுக்கி பல்வேறு துறைகளுக்கு தனித் தனியே பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி நிர்வகித்து வருவதுதான்.
3. கடந்த பத்தாண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தாமல் பல்கலைக்கழகங்களின் நிலங்களை அரசு வெவ்வேறு துறைகளின் பயன்பாட்டிற்கு அனுமதித்து வருவது மிகவும் வேதனைக்குரியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இடத்தை கையகப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அரசு திட்டமிட்ட போது கடுமையான எதிர்ப்பு அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. "தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மக்கள் காக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை செம்மைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்.
ஆட்சியரகத்திற்கு இடம் கையகப்படுத்தினால் தமிழுக்காக நிலம் கொடுத்தவர்களின் எண்ணம் ஈடேறாது" என்று தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன் அவர்கள் கூறியிருந்தார். "பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சியரகம் அமைப்பது தமிழின் பெருமையை சிதைக்கும் செயல்" என்று சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் பேசியிருந்தார்.
4. மக்களாட்சி மாண்புகளை மதிக்காமல் அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைத்தனர்.
5. இன்று, அதே நிலை, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உருவாகி உள்ளது.
6. சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 5 வளாகங்களில் 83 துறைகளுடன் 1857ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.
7. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி வளாக நிலங்கள், சேப்பாக்கம் பகுதியில் உள்ள நிலங்கள் ஆகியவற்றை வெவ்வேறு துறைகள் வெவ்வேறு பணிகளுக்கு கையகப்படுத்தி, கட்டடங்கள் கட்டும் முயற்சிகள் நடப்பதாக அறியப்படும் செய்திகள் மிகவும் கவலை தருவதாக அமைந்துள்ளது.
8. இந்தியாவில் 1857ம் ஆண்டு உருவான முதன் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கிய பெருமையுடன் முதன்மையான பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது. 175 வருட பாரம்பரியம் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு முக்கியமான ஆய்வு மையம், சேப்பாக்கத்தில் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதி அருகில், வாலாஜா சாலையில் இயங்கி வருகிறது.
9. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயர் ஆய்வு நிறுவனமாக உலகப் புகழ் பெற்ற கணிதமேதை இராமானுஜம் பெயரில் "இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம்" (Ramanujan Institute for Advanced Study in Mathematics) விளங்குகிறது.
10. பல்கலைக்கழக மாணவிகள் தங்கும் விடுதி, இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய வற்றின் பயன்பாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நிலங்களின் ஒரு பகுதியை கையகப்படுத்தி, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தோழி விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
11. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் தொடங்கி மெட்ரோ ரயில் திட்டம் வரை ஈவு இரக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்களின் இடங்கள் கையகப்படுத்தப்படுவது சமூகநீதியின் அடிப்படையில் கல்வித் தரும் பொறுப்பில் இருந்து தமிழ்நாடு அரசை விலக வைக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டி உள்ளது.
12. பல்கலைக்கழகத்தின் இடத்தை பறித்து, பல்கலைக்கழகத்தின் ஆய்வு நடவடிக்கைகளை முடக்குவது ஒரு புறம். மற்றோரு புறம், உயர் ஆய்வு நிறுவனம் மற்றும் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதி, இரண்டிற்கும் இடையில், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கும் விடுதி என்பது எத்தகைப் பாதிப்பை அனைத்துத் தரப்பினருக்கும் எற்படுத்தும் என்ற எந்த புரிதலும் இல்லாமல் தயார் செய்யப்பட்டுள்ள பரிந்துரையாகவே தோழி விடுதி இடத் தேர்வைப் பார்க்க வேண்டி உள்ளது.
13. வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய பெண்களுக்கு சிறந்த விடுதிகளை அரசு அமைப்பது மிகவும் போற்றுதலுக்குரியது. அனைத்துத் தரப்பினரும் பெரும் மகிழ்ச்சியுடன் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கின்றனர். விடுதி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம்தான் ஆட்சேபணைக்குரியது.
14. சேப்பாக்கத்தில்தான் விடுதி அமைக்க வேண்டும் என்றால், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஒரு பகுதியை வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதிகட்ட பயன்படுத்தலாம். ஏற்கனவே, அரசினர் தோட்டத்தில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஒரு பகுதி நிலம் தரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் விடுதிக்கு அரசினர் தோட்டத்தில் மற்றோரு பகுதி நிலம் ஒதுக்கப்படலாம்.
15. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட வரும் விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலுள்ள, உலகத்திலுள்ள பல பகுதிகளில் இருந்துதான் வருகின்றனர். சென்னை நகரத்தின் பல பகுதிகளிலிருந்தும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள், பிற நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து, கிரிக்கெட் விளையாடும் நாட்களில், பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்தில் அமைத்து, அந்த நிலத்தில் பாதுகாப்பான பெண்கள் விடுதி உள்ளிட்ட மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அல்லது மைதான வளாகத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி விடுதி அமைக்கலாம். எதற்கு முன்னுரிமை என்பதே இன்று நம்முன் உள்ள சவால்.
16. சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலங்களை அரசு கையகப்படுத்தி கல்வியியல் சாராத வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
17. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அமைந்துள்ள வளாகத்தின் நிலங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
18. வேறு பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து தோழி விடுதிகளுக்கான கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. ”