சென்னைப் பல்கலைக்கழகம் ஏபிசி திட்டத்தை செயல்படுத்துவதை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு கிளையின் சார்பில், அதன் அலுவலகச் செயலாளர், வெ. சுதாகர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
” மத்திய பாஜக அரசாங்கம் அமல்படுத்திவரும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக அகாடெமிக் கிரெடிட் வங்கித் திட்டம் (Academic Bank of Credit – ABC scheme) உள்ளது. உயர்கல்வியை இணையவழிக் கல்வியாக்குவதன் மூலம் அதனை தனியார்மயம், வியாபாரமயம் ஆக்குவதற்காகவே இந்த ஏபிசி திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியது.
ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களை தள்ளுவதே ஏபிசி திட்டத்தின் விளைவாக இருக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்து இத்திட்டத்தை எதிர்த்து வரும் வேளையில் அதனை சென்னை பல்கலைக்கழகம் அமல்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு மாநில அரசாங்கம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் வேளையில் அதையும் பொருட்படுத்தாது சென்னை பல்கலைக்கழகம் மிகவும் நாசகரமான இந்த ஏபிசி திட்டத்தை அமல்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏபிசி திட்டத்தின் படுபாதக பின்விளைவுகளை சரியாக ஆராயாமலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்தைக் கேளாமலும் அவசர கதியில் சென்னை பல்கலைக்கழகம் ஏபிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியதை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி (ஏ.ஐ.எஸ்.இ.சி) வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் இந்த நாசகார ஏபிசி திட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற ஏ.ஐ.எஸ்.இ.சி கோருகிறது.
இத்திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் திரும்பப் பெரும் வகையில் குரலெழுப்புமாறு ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏ.ஐ.எஸ்.இ.சி அறைகூவி அழைக்கிறது.” என்று அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.